ADVERTISEMENT

தமிழக ஆட்சியில் வெற்றிடம் இல்லை....சினிமாத்துறையில் தான் வெற்றிடம் உள்ளது!!- திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!!!

01:21 PM Nov 22, 2019 | Anonymous (not verified)

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கொடுத்த மனுக்கள் மீது தீர்வு கண்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செம்பட்டியில் உள்ள சி.சி.கே.எம். மஹாலில் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மு.விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு வரவேற்று பேசினார். மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான வி.மருதராஜ் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் பி.கே.டி.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிவிட்டு பேசும்போது, "தமிழகத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், தங்கத்தாரகை அம்மா வழியில் வந்த தமிழக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார்கள்.

அம்மா மறைவிற்கு பின்பு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று சில சினிமா நடிகர்கள் பேசுகின்றனர். வெற்றிடம் தமிழகத்தில் இல்லை. தமிழக ஆட்சியில் இல்லை சினிமாத்துறையில் தான் மாபெரும் வெற்றிடம் உள்ளது. எம்.ஜி.ஆர், சிவாஜி அவர்கள் காலத்தில் அவர்கள் நடித்த படம் நூறு நாட்கள் ஓடும், இருநூறு நாட்கள் ஓடும். ஆனால் இப்போது நடித்து வரும் நடிகர்கள் நடித்த படம் ஒரு வாரத்திற்கு மேல் ஓடுவதில்லை. அவர்கள் நடித்த படத்தில் பாட்டுக்கள் கூட யாரும் பாடுவது கிடையாது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் ஆகியோரும் நடித்தாலும் தமிழகத்தில் தலைசிறந்த நடிகராக புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி,அர். அவர்கள் மகுடம் சூட்டினார்.

அவரிடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. காரணம் மக்களுக்கு நல்லது செய்து சத்துணவு வழங்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். அதன்பின்னர் வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தாலிக்கு தங்கம் முதல், இலவச மடிக்கணிணி, முதியோர் உதவித்தொகையை உயர்த்திக் கொடுத்தல் போன்ற ஒப்பற்ற திட்டங்களை செயல்படுத்தியதால் அவரும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். ஆனால் இப்போது வெற்றிடம் உள்ளது என்று கூறுபவர்கள் உள்ள சினிமாத்துறையில் தான் வெற்றிடம் உள்ளது. அந்த இடத்தை இன்றுவரை யாரும் நிரப்பவில்லை.

தமிழகத்தில் அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் ஒரு நல்லாட்சி நடைபெறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் நமது கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. திமுகவிடமிருந்தும், காங்கிரசிடமிருந்தும் அந்த தொகுதியை நாம் கைப்பற்றியுள்ளோம். மக்களால் நான், மக்களுக்காக நான் என்று கூறிய அம்மா வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் பிரிவை ஏற்படுத்தி அதன்மூலம் மனுக்களை பெற்று நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இதை தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் மனதார பாராட்டுகிறார்கள்" என்றார்.


விழாவில் வருவாய்த்துறை சார்பில் விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சிறுகுறு விவசாயி சான்று, வாரிசு சான்று, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விதவை உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, இறப்பு நிவாரண நிதி, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்ட குடியிருப்புகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரம் என மொத்தம் 1,169 பயனாளிகளுக்கு ரூ.118.34 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கு.உஷா, மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், அறங்காவலர் குழுத்தலைவர் பிரேம்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் ராமராசு, ஆவின் துணைத்தலைவர் சிவலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.டி.நடராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சிவக்குமார், ஆத்தூர் ஒன்றிய ஆணையாளர் சீதாராமன், ஆத்தூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் பி.கோபி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் தேவராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பித்தளைப்பட்டி நடராஜன், மாவட்ட மீனவரணி இணைச் செயலாளர் வக்கம்பட்டி அந்தோணி,சின்னாளபட்டி பேரூர் கழக செயலாளர் எல்.கணேஷ்பிரபு, சித்தையன்கோட்டை பேரூர் கழக செயலாளர் அக்பர்அலி மற்றும் அரசு அலுவலர்கள், அ.தி.மு.க. கழக நிர்வாகிகள், இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்!


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT