ADVERTISEMENT

திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் வீசப்பட்ட 10 கள்ளத் துப்பாக்கிகள்!

09:04 AM Oct 07, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் வீசப்பட்ட 10 கள்ளத் துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை, தவசிமடை, உள்ளிட்ட பகுதிகளில் சிலர் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து எஸ்.பி. ரவளிபிரியா உத்தரவின்பேரில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். அப்போது கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தவசிமேடை அருகே வனப்பகுதியில் 14 கள்ளத் துப்பாக்கிகள் கேட்பாரற்று கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாரின் எச்சரிக்கையின்பேரில் கள்ளத்துப்பாக்கிகளை வீசி சென்றது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவ்வப்போது வனப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

அதன்படி நேற்று காலை தவசிமடை அருகே வனப்பகுதியான சிறு ஓடை பகுதியில் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு வினோத், சிறுமலை வனசரகர் மனோஜ் மற்றும் போலீசார் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 10 கள்ளத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு துப்பாக்கி பேரல் ஆகியவை கேட்பாரற்று கிடந்தன. அதை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர் அதில் போலீசார் எச்சரிக்கையின்பேரில் கள்ளத்துப்பாக்கிகள் வீசி சென்றது தெரியவந்தது.

திண்டுக்கல் அருகே அடுத்தடுத்து வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே நத்தம் அருகே உள்ள மலையூர் காந்தமலை. கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர், கூக்கல் பூண்டி, கே.சி.பட்டி மற்றும் பாச்சலூர் ஆகிய மலை கிராமங்களில் பலர் உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரடண்ட் ரவளிபிரியா உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து போலீசாருடன் வனத்துறையினரும் தேடுதல் வேட்டையில் களமிறங்கி இருக்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT