திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே காவல்துறை தம்பதியினர் தங்கள் மாத சம்பளத்தில் இருந்து ஆதரவற்ற முதியர் காப்பகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Advertisment

அம்மையநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தஅன்பு, அவரது மனைவி செல்வரத்தினம் ஆகியோர் அம்மையநாயக்கனூர், விளாம்பட்டி காவல் நிலையங்களில் தலைமைக் காவலர்களாக பணிபுரிந்துவருகின்றனர். கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் உத்தரவால் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவரும் சூழ்நிலையினைக் கருத்தில்கொண்ட காவல்துறை தம்பதியினர், தங்களால் இயன்ற உதவியை செய்வதற்கு முன்வந்தனர்.

Advertisment

தலைமை காவலர் அன்பு தம்பதியினர், தங்களின் ஒருமாத ஊதியத்தில் அம்மையநாயக்கனூர் பகுதியில் செயல்படும் முதியோர் காப்பகம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நேரடியாகச் சென்று வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கு மருத்துவர்களுக்கு அடுத்தாற்போல் காவல்துறையினரின் பணி இருந்துவரும் வேளையில், அம்மையநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த காவல்துறை தம்பதியினர் தங்கள் சொந்தப் பணத்தில் கரோனா நிவாரண பொருட்கள் வழங்கியிருப்பது, காவல்துறைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருப்பதாக பொதுமக்களிடையே பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, அன்பு, செல்வரத்தினம் ஆகியோரை திண்டுக்கல் சரக காவல்துறை டி.ஐ.ஜி. முத்துச்சாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

Advertisment