ADVERTISEMENT

நடவடிக்கை எடுக்க மறுத்த இன்ஸ்பெக்டர்; விபரீத முடிவெடுத்த விவசாயி

03:15 PM Feb 13, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே உள்ள குள்ளலகுண்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி பாண்டிக்கு கொடைரோடு சிறுமலை அடிவாரம் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியில் உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த சிலர் அபகரிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்று கூறி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டி புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மீது இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் பாண்டி நிலக்கோட்டை நீதிமன்றத்தை நாடி வழக்குப் பதிவு செய்வதற்கான உத்தரவையும் வாங்கி கொடுத்தார். அப்படி இருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.

இதனால் மனம் நொந்து போன விவசாயி பாண்டி கடந்த 9 ஆம் தேதி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்குச் சென்றவர் காவல் நிலைய வாசற்படி முன் உட்கார்ந்து விஷம் குடித்துள்ளார். அதைக் கண்ட போலீசார் உடனே பாண்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இந்நிலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசார் உடனே பாண்டி கொடுத்த புகாரின் பேரில் நாச்சியப்பன், சங்கர், சின்ன கருப்பு ஆகிய 3 பேர் மீது அதிரடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் முன்பாக பாண்டி விஷம் குடித்துவிட்டு உட்கார்ந்து இருந்தபோது இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி ஃபோனில் பேசிக்கொண்டிருந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் உள்ள சில போலீஸாரிடம் கேட்டபோது, "இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி ஸ்டேஷனுக்கு பொறுப்பு ஏற்றதிலிருந்து யாரையும் மரியாதை இல்லாமல் தான் பேசுவார். ஆனால் வசதி படைத்தவர்கள் என்றால் அவர்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவார். அதுபோலதான் பாண்டி வழக்கிலும் நடந்திருக்கிறது. பலமுறை பாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தனது புகார் எண் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டாலும் கூட சரி வர இன்ஸ்பெக்டர் பதில் சொல்வதில்லை. எனவே எனது புகார் மீது நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்கிறீர்கள், நான் செத்தால் தான் எப்.ஐ.ஆர். போடுவீர்கள் என்று பாண்டி கூறினார். அதற்கு இன்ஸ்பெக்டர் மரியாதை இல்லாமல் வாய்க்கு வந்தபடி அசிங்கமாக பேசினார்.

அதனால்தான் பாண்டி, தான் மறைத்து வைத்திருந்த விஷ மருந்தை எடுத்து போலீஸ் ஸ்டேஷன் வாசப்படி முன்னே குடித்துவிட்டு மயங்கியவாறே உட்கார்ந்துவிட்டார். இந்த விஷயம் இன்ஸ்பெக்டருக்கு தெரிந்தும் கூட எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் பாண்டி முன் நின்று கொண்டு ஃபோன் பேசிக்கொண்டே இருந்தார். அப்பொழுது விஷம் குடித்து உட்கார்ந்திருந்த பாண்டியும் மயங்கிய நிலையில் அப்படியே விழுந்துவிட்டார் அதையும் இன்ஸ்பெக்டர் கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகு காவல் நிலையத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் பாண்டியை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். உயிரின் மதிப்பு தெரியாமல் கல் நெஞ்சு படைத்த இன்ஸ்பெக்டராக இருந்தது மனம் வேதனையாக இருக்கிறது. இந்த ஸ்டேஷனுக்கு பொறுப்பேற்று இந்த இரண்டு வருட காலத்தில் பொது மக்களையும் போலீஸ்காரர்கள் கூட வாய்க்கு வந்தபடி அசிங்கமாக பேசுவது தான் இந்த இன்ஸ்பெக்டர் பணி அதனாலேயே இவருக்கு வேலை பார்த்த டிரைவர் கூட மாறுதலாகி போய்விட்டார். ரோல்காலில் போலீஸ்காரர்களை கூட மரியாதை இல்லாமல் தான் பேசுவார். சமீபத்தில் கூட ரோல் காலுக்கு வந்த பெண் போலீசை யாரை மயக்க இப்படி மேக்கப் போட்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார். இதனால் அந்த பெண் போலீஸ் டிஎஸ்பி வரை புகார் கொடுத்தும் இருக்கிறார். இன்ஸ்பெக்டரின் மரியாதை இல்லாத பேச்சாலும் செயல்பாடுகள் மூலமும் அரசுக்கு தான் கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது" என்று கூறினார்கள்.

இது பற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரிடம் கேட்டபோது, "பாண்டி கொடுத்த புகார் மற்றும் பாண்டியன் மகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து கொண்டு தான் இருந்திருக்கிறார். அதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று என்னிடம் கூறியிருந்தால் கூட உடனே நடவடிக்கை எடுக்க சொல்லி இருந்திருப்பேன். அதை விட்டுட்டு அப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டார். ஆனால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே உள்ள டீக்கடையில் விஷ மருந்து குடித்துவிட்டு தான் அந்த பாண்டி காவல் நிலையத்தின் முன் உட்கார்ந்து இருக்கிறார். அதை கண்டு உடனே அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு தான் அவர் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்திருக்கிறார். இருந்தாலும் இதைப்பற்றி டிஎஸ்பி தலைமையில் விசாரணைக் குழு அமைத்திருக்கிறேன். அந்தக் குழு விசாரணை அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்த நிலையில் தற்போது அம்மைநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமியை ஆயுதப் படைக்கு மாற்றி அதிரடி உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி பாஸ்கரன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT