ADVERTISEMENT

தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல் மார்க்கண்டேயன்..?

01:57 PM Dec 23, 2018 | nagendran

சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல் என்று மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் தலையிட்டு, மார்க்கண்டேயனுக்கு செய்தி தொடர்பாளர் பதவியையும் பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு, எங்களுக்குள் எந்த சர்ச்சையும் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தினர்.

ADVERTISEMENT

.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட புதூரில் அதிமுக கூட்டத்தில் மார்க்கண்டேயன் ஆதரவாளர்களும், கடம்பூர் ராஜூவின் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், கட்சிக்காரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது, தினகரன் அணிக்காக வேலை பார்க்கிறாரா மார்க்கண்டேயன்? என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், "அண்மையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு வந்தபோது, விளாத்திகுளத்தில் மாஜிக்கள் மார்க்கண்டேயன், சின்னப்பன் இதில் யாருக்கு சீட்டு கொடுத்தால் வெற்றி வாய்ப்பு என்று கேட்டார். இதில் 10-ல் 8 பேர் மார்க்கண்டேயனுக்கே வாய்ப்பு என்று தெரிவித்தோம். இதனால் எல்லோரும் சேர்ந்து கட்சிப் பணியாற்றுங்கள் என்று சொன்னார். ஆனால் மொத்தத்தையும் மார்க்கண்டேயன் கெடுத்துவிட்டார்' என்றனர்.

ஏன் இந்த மோதல் அடிதடி என்று முக்கிய நிர்வாகி நம்மிடம் விவரித்தார், "அதாவது விளாத்திகுளம் தொகுதிக்கு போடப்பட்ட பொறுப்பாளர்கள் சிலரை மாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர் சி.த.செல்லபாண்டியனிடம், மார்க்கண்டேயன் கோரிக்கை வைத்தார். அதை மா.செ. ஏற்கவில்லை. இதனால், வம்பு இழுக்க வேண்டும் என்பதற்காகவே நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மார்க்கண்டேயன், இன்றைய கூட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

கூட்டம் ஆரம்பித்த உடனே மார்க்கண்டேயனின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் புதூர் முன்னாள் சேர்மன் தனஞ்செயனின் வேட்டியை உருவ முயன்றனர். இதனால் கூட்டத்தில் ரசாபாசம் உருவானது. ஒட்டப்பிடாரம் முன்னாள் சேர்மன் காந்தி காமாட்சி, விளாத்திகுளத்தை சேர்ந்த குரங்கு முருகன் உள்ளிட்டோர் கடும் ரகளையில் ஈடுபட்டபோது, அதை மார்க்கண்டேயன் வேடிக்கை பார்த்தாரே தவிர, அவர்களை அமைதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் கடம்பூர் ராஜூ கீழே இறங்கி வந்து சமாதானப்படுத்தினார். இதனால் மார்க்கண்டேயன் தான் தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல்லா இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது "என்றார்.

விளாத்திகுளத்தை பொறுத்தவரை அதிமுகவிற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மார்க்கண்டேயனுக்கு தான் சீட் என்றும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், அதை உதாசீனப்படுத்தும் வகையிலே, இன்று மார்க்கண்டேயன் நடந்திருக்கிறார். கூட்டத்தில் மார்க்கண்டேயனை, செல்லப்பாண்டியன் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்க, கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் மார்க்கண்டேயன்.

அ.ம.மு.கவின் தென் மண்டல பொறுப்பாளரான மாணிக்க ராஜாவும், மார்க்கண்டேயனும் நெருங்கிய நண்பர்கள். ஒருவேளை இடைத் தேர்தலில் ஜெயித்து அ.ம.மு.கவிற்கு மார்க்கண்டேயன் தாவி விடுவாரோ? அல்லது தேர்தலுக்கு முன்னதாகவே அணி மாறிடுவாரோ? என்ற சந்தேகம் கிளை செயலாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT