ADVERTISEMENT

பெற்றோருக்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி மரணம்

11:04 AM Jul 12, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தர்மபுரி மாவட்டம் ஜிட்டாண்டஅள்ளி அருகே உள்ள குளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் (18) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தர்மபுரியில் உள்ள அரசு ஐடிஐ தொழில் பயிற்சி மையத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கிஷோரும் ஜிட்டாண்டஅள்ளி அருகே உள்ள கொல்லப்பட்டியைச் சேர்ந்த அபர்ணாவும் (19) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) காதலித்து வந்தனர். அபர்ணா, பாலக்கோட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் கல்லூரிக்கு தினமும் ஒரே பேருந்தில் சென்று வந்தபோது, அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, பின்பு காதல் மலர்ந்துள்ளது.

மகளின் காதல் விவகாரத்தை அறிந்த பெற்றோர், அவருக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதனால் அபர்ணா தனது காதலன் கிஷோரை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தார். அதன்படி இருவரும் கடந்த 7 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி பாலக்கோட்டில் உள்ள முருகன் கோவிலில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் கிஷோரும், அபர்ணாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து தாங்கள் திருமணம் செய்து கொண்டதை மறைத்து வழக்கம்போல இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இதனிடையே அபர்ணா காதல் திருமணம் செய்து கொண்டதை அறியாத அவருடைய பெற்றோர், ஏற்கனவே அவருக்கு பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளையுடன் திருமணம் செய்து வைக்க தீவிர ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர். ஆனால் காதல் திருமணம் செய்து கொண்டதை பெற்றோரிடம் சொல்ல முடியாமல் தவித்து வந்த அபர்ணா தனது காதலன் கிஷோரிடம் சொல்லி அழுதுள்ளார். அதன் பிறகு இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

எந்த முருகன் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனரோ அதே பாலக்கோடு முருகன் கோவிலுக்கு சென்று கடந்த 10 ஆம் தேதி இருவரும் எலி மருந்தை தண்ணீரில் கலக்கி குடித்துள்ளனர். இதனிடையே இருவரும் தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என்ற தகவலை அவரவர் பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரின் பெற்றோர்களும், உறவினர்களும் பாலக்கோடு முருகன் கோவிலுக்கு சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கிஷோரையும், அபர்ணாவையும் மீட்டு உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே அபர்ணா உயிரிழந்தார்.

இவரைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிஷோரும் கடந்த 10 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு இருவரின் சடலங்களும் உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT