girl passes away police arrested 17 year boy in dharmapuri

Advertisment

தருமபுரி அருகே வனப் பகுதியில் மர்மமான முறையில் கிடந்தஇளம்பெண் சடலம்; காவல்துறையினர் சடலத்தை மீட்டு கொலையா தற்கொலையா என விசாரணை.

தருமபுரி மாவட்டம், கடத்தூரான் கொட்டாய் அடுத்த கோம்பை வனப் பகுதியில் இளம்பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக அதியமான்கோட்டை காவல்நிலையத்திற்குத்தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதியமான்கோட்டை காவல்துறையினர், சடலத்தை ஆய்வு செய்துள்ளனர். அதில் இளம்பெண் கழுத்தில், தழும்பு இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தருமபுரி கோல்டன் தெருவைச் சேர்ந்த, நகராட்சி எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் புவனேஸ்வரன் மகள் ஹர்ஷா என்பது தெரியவந்தது. ஹர்ஷா ஓசூரில் உள்ள ஒரு பார்மஸி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து பணிக்குச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஹர்ஷா கோம்பை வனப் பகுதியில், நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், சடலத்தை மீட்டகாவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஹர்ஷாவின் கழுத்தில்நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருப்பதால், கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சூழ்நிலையில், தர்மபுரி மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினார். அந்த இடத்தின் செல்போன் லொக்கேஷன் மற்றும் அப்பகுதி மக்களிடமும் விசாரணை மேற்கொண்டார். அதில் கிடைத்த தகவலின் பெயரில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை காவல்துறை பிடித்து விசாரணையை மேற்கொண்டனர்.

Advertisment

அந்த விசாரணையில் 17 வயது சிறுவனின், அக்காவின் தோழியான ஹர்ஷா அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில் அந்தச் சிறுவனுக்கும் ஹர்ஷாவுக்கும் இடையே காதல் வளர்ந்துள்ளது. இந்த நிலையில், ஆறு மாதத்திற்கு முன்பாக ஒசூரில் உள்ள ஒரு பார்மஸி நிறுவனத்தில் ஹர்ஷா பணியில் சேர்ந்துள்ளார். அதன்பிறகு அவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது பற்றி அந்த 17 வயது சிறுவன் கேட்க, தான் பணிபுரியும் அதே நிறுவனத்தில் ஒரு நபருடன் ஹர்ஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், ஒசூரில் இருந்த ஹர்ஷாவை வரவழைத்து எப்போதும் அவர்கள் தனியாக சந்திக்கும் கோம்பை வனப் பகுதியில் நேற்று முன் தினமும் சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் ஹர்ஷாவின் துப்பட்டாவால் அவரது கழுத்தை அந்தச் சிறுவன் நெரித்துக் கொன்றதாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தச் சிறுவன் மீது 302 மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.