ADVERTISEMENT

டெங்கு பாதிப்பு; மருத்துவர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு

04:29 PM Sep 22, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெங்கு காய்ச்சல் தொடர்பாக மருத்துவர்களுக்குத் தமிழ்நாடு மருத்துவத்துறை இயக்குநரகம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனையடுத்து டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உயர் அலுவலர்களுடன் கடந்த 12 ஆம் தேதி, மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாவட்ட அளவிலான மருத்துவ அலுவலர்கள், மருத்துவத்துறை இணை இயக்குநர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் கடந்த 16 ஆம் தேதி டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஓமந்தூரார் மருத்துவமனையில் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

அதே சமயம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான கொசு உற்பத்திக்குக் காரணமான தனி நபர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பதற்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதன் முறையாக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும். அதன் பின்னர் கொசு உற்பத்திக்குக் காரணமான மூல காரணத்தைச் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் பொது சுகாதாரச் சட்டத்தின்படி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவத்துறை இயக்குநரகம் சார்பில் மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் டெங்கு பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட டெங்கு பாதிப்பு தடுப்பு அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்து தகவல் அளிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT