ADVERTISEMENT

அழிந்து வரும் வரலாற்றுச் சிறப்பு கொண்ட கோயிலை பாதுகாக்க கோரிக்கை

11:50 AM Dec 12, 2023 | ArunPrakash

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேலக்கொடுமலூரில் ஒரு சிவன் கோயில் உள்ளது. பாண்டியர், விஜயநகர அரசுகளின் வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுகள், சிற்பங்கள், கட்டடக்கலை சிறப்புகளைக் கொண்டது. இது தனது கடந்த காலச் சிறப்பை இழந்து தற்போது சிதிலமடைந்து, அழியும் நிலையிலுள்ளது. இக்கோயிலை பாதுகாக்க ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, “மேலக்கொடுமலூர் குமுலீஸ்வரர் கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட சிறிய கோயில். எனினும் அழகிய தேவகோட்டம், விருத்தஸ்புடிதம் போன்ற அமைப்புகளுடன் கருவறை, அர்த்தமண்டபத்துடன் உள்ளது. நுழைவுவாயிலில் கஜலட்சுமி உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களின் சதுரவடிவ ஆவுடையுடன் லிங்கம் உள்ளது. இங்கிருந்த இரு கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை 1907-ல் பதிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

கி.பி.11-ம் நூற்றாண்டு சோழர் கல்வெட்டுகளில் உத்தமசோழநல்லூர் எனப்படும் இவ்வூர், கி.பி.13-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சியில் உத்தமபாண்டியநல்லூர் என மாற்றப்பட்டுள்ளது. கல்வெட்டில் இறைவன் உத்தமபாண்டீஸ்வரமுடையார் எனப்படுகிறார். இவ்வூரைச் சேர்ந்த அரையன் யாதவராயன், உச்சிபூசைக்காக நிறுவிய கண்டவிரமிண்டன் என்ற சந்திக்கு வேண்டும் நிவந்தங்களுக்காக, மன்னர் சுந்தரபாண்டியன் வடதலைச் செம்பிநாட்டு கொற்றூர், கண்ணிப்பேரி, உழையூர் ஆகிய ஊர்களை தானமாகக் கொடுத்துள்ளார். இவ்வூர்களில் விளைந்த நிலத்துக்கு வரி விதிக்கப்பட்டு கோயிலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வரி, நிலத்தையும் அதில் விளைந்த பயிரையும் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நன்செய் நிலத்தின் ஒவ்வொரு 'மா' நிலத்திற்கும் 3/8 காசும், குறுவை விளைந்த நிலத்துக்கு முக்கால் காசும், ஐப்பசிக்குறுவை விளைந்த நிலத்துக்கு அரைக் காசும், துலா இறைத்து விளைந்த நிலத்துக்கு கால் காசும், எள், வரகு, தினை விளைந்த நிலத்துக்கு ஒன்றே கால் திரமம் காசும் வரியாகப் பெற்றிருக்கிறார்கள். இதே போன்ற ஒரு கல்வெட்டு சிவகாசி அருகிலுள்ள ஈஞ்சார் சிவன் கோயிலிலும் உள்ளது.

இங்குள்ள கி.பி.1534-ம் ஆண்டுக் கல்வெட்டு, விஜயநகர மன்னர் இம்மடி அச்சுத தேவமகாராயர், தனுஷ்கோடியில் இருந்த சேது மாதவப்பெருமாள், ராமநாதன் ஆகிய கோயில்களுக்கு மேலக்கொடுமலூரைத் தானமாக வழங்கியுள்ளார். இவ்வூரின் ஒரு பகுதியை சிவன் கோயிலுக்கு தேவதானமாகவும் மறு பகுதியை தனுஷ்கோடி கோயிலுக்கு திருவிடையாட்டமாகவும் கொடுத்துள்ளார். அழிந்துபோன தனுஷ்கோடியில் பழமையான இரு கோயில்கள் இருந்ததற்கு இக்கல்வெட்டு ஆதாரமாக உள்ளது.

கல்வெட்டு, கட்டடக்கலைச் சிறப்பு வாய்ந்த இக்கோயில், தற்போது முழுவதும் சிதிலமடைந்த நிலையில் குப்பைகள் போடும் இடமாக மாறியுள்ளது. வெளிப்பகுதியில் இருந்த தேவகோட்டங்கள் சிதைந்துள்ளன. பிரஸ்தரத்தின் மேற்பகுதி விமானம் இல்லை. தொல்லியல் சிறப்பு கொண்ட இக்கோயிலை பழுது நீக்கி பாதுகாக்கவேண்டும் என கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT