Skip to main content

சோழர் படை கட்டிய சிவன் கோயில்; கல்லூரி மாணவி ஆய்வில் தகவல்

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

chola force build siva temple research scholar discived details

 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் சோழர் படையினர் சிவன் கோயில் கட்டிய தகவலை தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி தெரிவித்தார்.

 

பால்கரையைச் சேர்ந்த ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி வே. சிவரஞ்சனி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு வழிகாட்டுதலில், தொல்லியல் இடங்களை நேரில் கள ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் வி.டோனிகா, ஸ்ரீவிபின், முகம்மது சகாப்தீன், தீபிகாஸ்ரீ, பார்னியாஸ்ரீ ஆகியோருடன் கள ஆய்வு செய்தபோது, வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள், சோழர்களின் வேளைக்கார மூன்றுகைப் படையினர் கட்டிய சிவன் கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்புகளைக் கண்டறிந்தார். இதுபற்றி மாணவி வே. சிவரஞ்சனி கூறியதாவது.

 

பெருங்கருணை என்னும் ஊர்:

இவ்வூர், கி.பி.12 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ பாண்டி நாட்டில் மதுராந்தக வளநாட்டின் புனைவாயிலிருக்கை பகுதியிலும், கி.பி.16 ஆம் நூற்றாண்டில் சுந்தரபாண்டிய வளநாட்டிலும் இருந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் இவ்வூர் தடங்கழி, பெருங்கருணைச் சதுர்வேதிமங்கலம், மஹாகருணாகிராமம், சிலைமுக்குய நல்லூர் எனவும், ஆங்கிலேயர் காலத்தில் 'வெள்ளந்துறையாகிய பெருங்கருணை' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூர் கண்மாய் தடங்கனி என அழைக்கப்படுவதன் மூலம் இவ்வூரின் பழம்பெயர் தடங்கழி சற்று மருவி இன்றும் நிலைத்திருப்பதை அறியமுடிகிறது. இவ்வூர் கோயில் கல்வெட்டுகள் மத்திய தொல்லியல் துறையால் 1907ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

 

சோழர் படை அமைத்த சிவன் ஆலயம்:

இவ்வூர் சிவன் தற்போது ஸ்ரீ அகிலாண்ட ஈசுவரர் எனப்படுகிறார். இங்கு இரு கல்வெட்டுகள் உள்ளன. ‘புகழ்மாது விளங்க’ எனத் தொடங்கும் கி.பி.1114 ஆண்டு கல்வெட்டு, முதலாம் குலோத்துங்க சோழனது 44 ஆம் ஆட்சியாண்டு முதல் கறியமுதிற்கும் ஆண்டுதோறும் வரும் நான்கு விஷு அயனங்களுக்கும் மாதந்தோறும் வரும் அமாவாசை பூசைக்கும் வேளாண் காளையவியனான குலோத்துங்கச் சோழ அள்ளுநாடாழ்வான் என்பவர் 11 தடி அளவுள்ள துண்டு நிலங்களை கோயிலுக்குக் கொடையாக வழங்கியுள்ளார் என்கிறது. இதில் அரைசறு கண்டி வயக்கல், மஞ்சளி வயக்கல், பெற்றாள் வயக்கல், செந்தி வயக்கல், சோழன் வயக்கல், தொண்டி வயக்கல், தொளர் வயக்கல் உள்ளிட்ட 12 வயக்கல் நிலங்கள் குறிப்பிடப்படுகின்றன. தரிசு நிலத்தினைச் சீர்படுத்தி, பயிர் செய்வதற்குரிய வகையில் பண்படுத்தப்பட்ட நிலம் வயக்கல் எனப்படும்.

 

இக்கல்வெட்டில் சிவன் பெயர் திருவேளைக்கார மூன்றுகை ஈஸ்வரமுடைய மகாதேவர் என்றுள்ளது. இதன்மூலம் சோழர்களின் வேளைக்கார மூன்றுகைப் படையினர், இக்கோயிலைக் கட்டினர் என்பது உறுதியாகிறது.  திருநெல்வேலி மாவட்டம் மணப்படைவீடு என்ற ஊர் சிவன் கோயிலும் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் மூன்றுகை படையால் கட்டப்பட்டது ஆகும். ‘ஈழமுங் கொங்குங் சோழமண்டலமும் கொண்ட’ முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி.1267 ஆம் ஆண்டு கல்வெட்டில், இவ்வூர் சபைக்கு மன்னர் வழங்கிய சலுகையை தொடர்ந்து பெறுவதற்காக உய்யவந்தானான சோழியத்தரையன் என்பவரின் ஏற்பாட்டில் சபை முதலிகள் கூடிய தகவலைத் தெரிவிக்கிறது. இதை இவ்வூர் சிற்பாசிரியன் அழகிய பாண்டிய ஆசாரியன் எழுதியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை என்பது கல்வெட்டில் நாயிற்றுக் கிழமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இடைக்காலக் குடியிருப்பு:
 

chola force build siva temple research scholar discived details

இவ்வூரில் கள மேற்பரப்பாய்வு செய்தபோது சிவப்பு, கருப்பு பானை ஓடுகள், வட்டச்சில்லுகள், சுடுமண் சக்கரம், மணி செய்யும் கற்கள், கல் குண்டு, இரும்புக் கசடுகள், சங்கு மற்றும் கல் வளையல் துண்டுகள், விலங்கின் பற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இங்கு இரும்பு உருக்காலை இருந்ததை இப்பகுதியில் கிடைத்த இரும்புக் கசடுகள் நிறுவுகின்றன.  சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் வரலாற்றின் இடைக்காலமான கி.பி.12-14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன.

 

இவ்வூரில் வரதராஜ பெருமாள், பட்டாபிராமர், ஆயிரவல்லியம்மன் கோயில்களும் உள்ளன. தொல்லியல் தடயங்கள் மூலம் கி.பி.12லிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் இப்பகுதியில் ஒரு முக்கிய ஊராக இவ்வூர் இருந்துள்ளதை அறிய முடிகிறது என அவர் கூறினார். 

 

 

Next Story

“தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பித்துள்ளோம்” - ஓ.பி.எஸ்.!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
“We have applied for an election symbol” - O.P.S.

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணி அமைத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஓ. பன்னீர் செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க. நிர்வாகி மற்றும் தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ. பன்னீர்செல்வம் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் பக்கெட் வாளி, பலாப்பழம் சின்னம், திராட்சைப் பழம் சின்னத்தில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம். என்னுடைய பலத்தை நிரூபிப்பதற்கு மட்டும் தேர்தலில் போட்டியிடவில்லை. அ.தி.மு.க.வின் எம்.ஜி.ஆர் வகுத்து தந்த சட்டவிதியின் படி தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அ.தி.மு.க.வை 50 ஆண்டுகளாக வழிநடத்தினார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையில் நாம் நடக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தலையாய குறிக்கோள். இதில் இருந்து மாறுபடக் கூடது என்பதுதான் என்னுடைய குறிக்கோள். அதன்படி தான் நடக்க வேண்டும் என்பது தான் ஒன்றறை கோடி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நிலைப்பாடும், எண்ணமும் ஆகும்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.