ADVERTISEMENT

கொள்ளையடிக்கும் கட்டணக் கழிப்பிடங்கள்... வேதனையில் சுற்றுலா பயணிகள்!

07:47 PM Apr 05, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோடை காலம் வந்துவிட்டதால் கொடைக்கானலை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது.

வேன்களில் வரக் கூடிய சுற்றுலாப் பயணிகள் இரண்டு நாள் மூன்று நாட்கள் சுற்றுலா விடுதிகளில் தங்கி கொடைக்கானலில் உள்ள தூண்பாறை, குணா குகை, லேக், பூங்கா, பேரிஜம் ஏரி உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்வார்கள். ஆனால் பேருந்தில் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் ஒரே நாளில் சில இடங்களை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்று விடுவார்கள்.

இப்படி பேருந்தில் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பிடம் மட்டுமே இருக்கிறது. இலவச கழிவறை வசதி இல்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் பணம் கொடுத்துத்தான் கழிவறைக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படி பணம் கொடுத்து கழிவறைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம் தலா 10 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கிறார்கள் நகராட்சி மூலம் ஏலம் எடுத்த குத்தகைதாரர்கள்.

விதிமுறைப்படி கழிவறை கட்டணம் எவ்வளவு என்று எழுதி போடாமலேயே சுற்றுலாப் பயணிகளிடம் பகல் கொள்ளை அடித்து வருகிறார்கள் என அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். அப்படி பணம் வசூலித்தும் சரிவர சுத்தம் செய்யாததால் கழிவறைகள் துர்நாற்றம் வீசும் நிலையில் மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் இருப்பதாகப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கலையரங்கம் கட்டண கழிப்பிடத்திலும் இதே நிலை இருக்கிறது.

இது சம்பந்தமாக கொடைக்கானல் நகராட்சி ஆணையர் நாராயணனிடம் கேட்டபோது, ''காண்ட்ராக்ட் எடுக்கக்கூடிய நபர்கள் விதிமுறைகள் படி தான் கட்டணங்கள் வசூல் செய்ய வேண்டும். ஆனால் கூடுதல் கட்டணங்கள் வசூல் செய்வதாக நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கே தெரிகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன். அதோடு கழிவறை கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தையும் பலகை மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும் அளவுக்கு வைக்கச் சொல்கிறேன்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT