ADVERTISEMENT

பொலி காளைகளுக்கு ஆபத்து! ஜல்லிக்கட்டுக்கும் ஆபத்து! -எடப்பாடி அரசின் புதிய திட்டம்!

05:28 PM Jan 24, 2020 | kalaimohan

“ஆட்டை ஆசையா வளர்க்கிறதே அதன் கழுத்தை அறுக்கத்தான்.. கிராமத்துல இப்படி ஒரு பழமொழி சொல்வாக... அதைப் போலத்தான் ஜல்லிக்கட்டுல மாடு பிடிச்சவனுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளருக்கும் காரைப் பரிசாகக் கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொலி காளைகளே இல்லாத நிலைமைக்கு தமிழகத்தைக் கொண்டுவர ஒரு சட்டத்தையே போட்டிருக்கிறாராமே..” என்று நம்மிடம் விசனப்பட்டார் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த குருநாதன்.

‘என்ன சொல்ல வர்றீங்க?’ என்று அவரிடமே கேட்டோம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


"எங்க அப்பாரு காலத்தில இருந்து ஆடு, மாடு வளர்க்கிறோம். மாட்டுக்கு முடை (இனப் பெருக்கத்துக்கான அறிகுறி) அடிச்சதுன்னா.. மேலத் தெரு பெரிய வீட்டுல கட்டியிருக்கிற பொலி காளைகிட்ட கூட்டிப் போய் விடுவோம். 2 தடவை மேல விழுந்துச்சுன்னா. சினை பிடிச்சிடும். மாட்டுக்காரருக்கு பத்தோ, இருபதோ கொடுத்திட்டு வந்திருவோம்.

அதிலும், சினை பிடிக்கலைன்னு மறு மாசம் கத்தும், ஒரு நெக்குல (இடத்தில்) நிக்காது. பக்கத்து ஊர்ல இருக்கிற டவுன் ஆஸ்பத்திரிக்குப் போயி.. சினை ஊசி போட்டா சினை பிடிச்சுக்கும். அதுலயும் பிடிக்கலைன்னா மறுபடியும் காளை மாட்டுகிட்ட விடுவோம். இப்ப என்னடான்னா பொலி காளை வளர்க்கிறதுக்குன்னு அரசாங்கம் தனிச் சட்டம் போட்டிருக்காமே? அதுல பதிவு பண்ணாட்டி ஆயிரக்கணக்கில அபராதம் போடுவாங்களாமே?" என்று எதிர்கேள்வி கேட்டார்.

கால்நடை விவசாயியான முருகன் படித்தவரும்கூட. “அரசாங்கத்த பகைச்சிக்க முடியாது. போட்டோவெல்லாம் வேணாங்க..” எனச் சொல்லிவிட்டு “அதாவது, மாடுகளின் இனப்பெருக்க நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள சட்டம் கடந்த ஆண்டே அமலுக்கு வந்துவிட்டது. இந்தப் புதிய சட்டத்தின் படி, கால்நடைத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்படும். ஹோல்ஸ்டைன், ஃபெர்சியன் போன்ற வெளிநாட்டு மாட்டு இனங்களை வளர்க்கும் விவசாயிகள், பாரம்பரியமான காளைகளான பூச்சிக் காளைகளையோ, பொலி காளைகளையோ வச்சிருக்கக்கூடாது.


ஹோல்ஸ்டைன், ஃபெர்சியன் மாட்டினங்களை குளிர் பிரதேசங்களிலும்,ஜெர்சி மாடுகளை சமவெளிப் பகுதிகளில் மட்டும் தான் வளர்க்க வேண்டும். அதுவே, நாட்டு பசுக்களை வைத்திருப்பவர்கள், காளைகளை வளர்த்துக் கொள்வதில் எந்தவொரு பிரச்சினையும் இல்ல. ஆனால்.. அந்தக் காளைகளை அரசாங்கத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். பதிவு செய்யாவிட்டால், ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை அந்தக் காளை உடற்தகுதியுடன் இல்லாத பட்சத்தில், அந்தக் காளைகளை அரசாங்கமே கொன்றுவிடவும் சட்டத்துல இடமிருக்கு.

இது மாடுகளின் இனப்பெருக்கத்திற்கு சினை ஊசிகள் மட்டும் தான் தீர்வுங்கிற அவல நிலையை நோக்கித் தள்ளும் நடவடிக்கைன்னுதான் சொல்ல முடியும். அதேபோல் கால்நடை மருத்துவமனைகளில் போடப்படும் சினை ஊசிகளால் பெண் கன்று மட்டுமே பிறக்குமாம். இதனால் இனி ஜல்லிக்கட்டு காளைகளே இல்லாத நிலை உருவாகி விடும்" என கால்நடை விவசாயிகளின் சார்பாகப் பேசினார்.

இதுதொடர்பாக கால்நடைத் துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "அதிக பால் உற்பத்தி என்ற இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். வெளிநாட்டு மாட்டு இனங்கள் அதிக பால் கொடுக்கக்கூடியவை. நாட்டு மாடுகளால் அதிக பால் கொடுக்க முடியாது. அதனால், அவற்றைத் தவிர்த்து, வெளிநாட்டு மாடுகளின் மீது கவனம் செலுத்தப்போகிறோம். அதிலும், சினை ஊசி வகைகளை இரண்டாகப் பிரித்திருக்கிறோம். ஒன்று பெண் கன்று மட்டுமே பிறக்கும் சினை ஊசி. இரண்டாவது, இப்போது நடைமுறையில் இருக்கும் ஊசி. எது யாருக்கு வேண்டுமோ, அதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.

ஆக, சினைக்கு போடும்போதே பிறக்கப் போவது பெண் கன்றுதான் என தெரிந்துவிடும். அப்புறம் எப்படி இனி ஜல்லிக்கட்டு காளைகளை உருவாக்க முடியும்? நாட்டு மாட்டு இனத்தை மெல்ல மெல்ல அழிக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது எடப்பாடி அரசு. இது நல்லதற்கா?

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT