ADVERTISEMENT

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... புதிய தளர்வுகள் என்னென்ன?

06:34 PM Aug 21, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் செப்டம்பர் மாதம் 6- ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (21/08/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்க பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உரிமையாளர்கள் உறுதிச் செய்ய வேண்டும். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மத்திய உணவுத் திட்டமும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15- ஆம் தேதிக்கு பின் பள்ளிகளைத் திறப்பது பற்றி ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்படும். அதேபோல், செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அனைத்து பட்டயப்படிப்பு வகுப்புகளும் 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடற்கரைகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள், சிறு வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 09.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள், இனி இரவு 10.00 மணி வரை செயல்படலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலை வாய்ப்பு பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளுடன் மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

மதிய உணவு வழங்குவதற்காக செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் கரோனா விதிகளைப் பின்பற்றாத நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தொற்று பரவலை வீடு வீடாகக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும். அரசின் தளர்வுகளை மக்கள் முழுப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் எதிர்காலம், மாணவர்களின் கல்வி, எதிர்காலம் பாதிக்கப்படாதவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT