ADVERTISEMENT

கலவரம் மூண்ட கடலூர்... இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல்!

11:50 AM Jul 20, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதால் மீன் வளம் குறைகிறது என்பதால் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி காலம் தொடங்கும்போது சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க கோரி கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதி மீனவர்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர். இன்னொரு பக்கம் மற்றொரு பகுதி மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று போராட்டங்கள் நடத்துகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலால் படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மீன்பிடி வலைகள் கொளுத்தப்பட்டன. இருதரப்பு மீனவர்களிடையே பயங்கரமான கலவரம் மூண்டது.

இந்நிலையில் இந்த ஆண்டும் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க கோரி ஒரு தரப்பு மீனவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், மற்றொரு தரப்பு மீனவர்கள் சுருக்குமடி வலையை அனுமதிக்க கூடாது என்று போராடுகின்றனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்க கோரி உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று (19.07.2021) தேவனாம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மீனவ பெண்கள் 250 பேர், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கடலில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனு கொடுப்பதற்காக தேவனாம்பட்டினம் கிராமத்திலிருந்து புறப்பட்டு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி சென்றனர். அவர்களை கடலூர், வன்னியர்பாளையம் அருகே தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ‘மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திக்க 5 பேர் மட்டும் செல்ல வேண்டும் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை’ என்று கூறி அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து வேறு வழியில் சென்ற மீனவப்பெண்கள் கடலூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவப் பெண்களிடம் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கடலூர் வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக சமரசம் ஏற்படவில்லை. 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் பொதுமக்கள் அனைவரும் மாற்றுப்பாதையில் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். இரவு 11 மணிவரை நீடித்த போராட்டம் அதிகாரிகளின் தொடர் முயற்சியின் காரணமாக நள்ளிரவு முடிவுக்கு வந்தது.

ஒரே பகுதியில் இரு தரப்பு மீனவர்களிடையே சுருக்குமடி பயன்படுத்துவதில் தொடர்ந்து பிரச்சனைகள், போராட்டங்கள் நடைபெற்று வருவதால் கடலோர பகுதிகளில், மீனவ கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடலோர பகுதிகளில், மீனவ கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT