ADVERTISEMENT

சீர்திருத்தப் பள்ளியிலிருந்து சிறுவர்கள் தப்பிச் சென்றதால் பதற்றம்!

01:12 PM Mar 24, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று முன்தினம் நள்ளிரவு (22.03.2023) கடலூர் டி.எஸ்.பி கரிகால் பாரி சங்கர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை ரயில்வே கேட்டில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது சந்தேகப்படும்படி இரு சிறுவர்கள் அந்த வழியாகச் சென்றனர். அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் சிதம்பரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பி வருவதும், அவர்களுடன் சேர்ந்து மொத்தம் 6 பேர் வேப்ப மரத்தில் ஏறி மதில் சுவர் வழியாக குதித்து தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த டி.எஸ்.பி உடனடியாக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்றார். அப்போதுதான் அங்கிருந்து சிறுவர்கள் தப்பிய விவரம் இல்லத்தின் இரவு காவலருக்கு தெரியவந்தது.

கடலூர் அடுத்த எஸ்.என்.சாவடி கெடிலம் ஆற்றுச்சாலையில் உள்ள அந்த அரசு சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் (சிறார் கூர்நோக்கு இல்லம்) குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 18 வயதிற்கு உட்பட்ட 13 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு உணவுக்கு பிறகு சிறுவர்களை அறையில் தங்க வைத்துவிட்டு வார்டன் சிவா இரவு காவல் பணியில் இருந்தார். அனைவரும் தூங்கிய பிறகு திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி, கடலூர் கூத்தப்பாக்கம் , சிதம்பரம் அடுத்த கிள்ளை, திருவண்ணாமலை உசம்பாடி, சிதம்பரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 முதல் 17 வயதுடைய 6 சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனிடையே சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பிய கிள்ளை மற்றும் திட்டக்குடி ஆவினங்குடியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கிள்ளை அருகில் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் சிக்கினர். இதுகுறித்து சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் கணபதி கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்தனர். தப்பி ஓடிய 6 பேரில் நான்கு பேர் பிடிபட்ட நிலையில் கூத்தப்பாக்கம் மற்றும் திருவண்ணாமலை சேர்ந்த இரு சிறுவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சீர்திருத்த பள்ளியில் உயரமான மதில் சுவர்கள், பாதுகாப்பான இரும்பு கேட்டுகள் இருந்தும் பாதுகாவலர்களின் கண்காணிப்பு குறைபாடு காரணமாக அடிக்கடி அங்கிருந்து சிறுவர்கள் தப்பிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் குண்டலிப்புலியூரில் உள்ள 'நல்ல சமேரியர் சாரிடபிள் டிரஸ்ட்' சார்பில் இயங்கி வந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அதிகாரிகள் விசாரணை நடத்தி அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 142 பேர் மற்றும் கோட்டக்குப்பம் கிளை காப்பகத்திலிருந்த 25 பேர் என மொத்தம் 167 பேர் மீட்கப்பட்டு கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அரசு அங்கீகாரத்துடன் இயங்கி வரும் காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டனர். கடலூர் புதுப்பாளையத்தில் இயங்கி வரும் ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தின் 'கருணா மனநலக் காப்பகம்', மஞ்சக்குப்பம் ஆல்பேட்டையில் உள்ள 'டாக்டர் தவராஜ் மனநலக் காப்பகம்' ஆகிய இரு இடங்களில் 23 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

கடந்த மாதம் 21ஆம் தேதி நள்ளிரவு புதுப்பாளையம் காப்பகத்தில் தங்கி இருந்த 4 பேர் கதவை உடைத்து ஜன்னல் வழியாக போர்வையை கட்டி அதன் வழியாக தப்பினர். இதில் ஒருவர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டார். இருவர் சொந்த ஊருக்கு சென்றனர். ஒருவர் என்னவானார் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து காப்பகத்தில் கூடுதல் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புதுப்பாளையம் காப்பகத்தில் இரவு காவலாளிகள் தனி அறையில் தூங்கினர். அப்போது குண்டலிப்புலியூர் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த திருவள்ளூரை சேர்ந்த சேதுராமன்(34), கிருஷ்ணகிரியை சேர்ந்த அஸ்லாம்(44), கொல்கத்தாவை சேர்ந்த சோனா மகதூர்(28), கேரளாவை சேர்ந்த பிஸ்மில்லா(35), திருநெல்வேலி மனோஜ்(25) ஆகியோர் தப்பிச் சென்றனர். முதல் தளத்தில் தங்கி இருந்த அவர்கள் அறையின் கதவை உடைத்து போர்வைகளை ஒன்றோடு ஒன்றாக கட்டி ஜன்னல் வழியாக கீழே இறங்கி தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து காப்பகத்தின் காவலாளிகள் கடலூர் தேவனாம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் காப்பகத்தில் விசாரணை நடத்தி, தப்பியவர்களை தேடி வருகின்றனர். கடலூர் காப்பகத்திலும், கடலூர் கூர்நோக்கு இல்லத்திலும் தங்கி இருந்தவர்கள் தப்பிச் சென்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT