
ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் வறுமையைப் பயன்படுத்தி குழந்தைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று கோடிகளில் கொழுத்த கும்பல் கடலூர் மாவட்டத்தில் சிக்கியுள்ளது. கடலூர் மாவட்டம், வடலூரைச் சேர்ந்த அருள்முருகன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுடர்விழி. இவர்களுக்கு 11 வயதில் மகனும் 9 வயதில் மகளும் உள்ளனர். சுடர்விழி கடந்த சில நாட்களுக்கு முன் தனது அக்கா கணவர் விஸ்வநாதனைச் சந்தித்து தன்னிடமுள்ள ஒரு ஆண் குழந்தைக்கு பிறப்புச் சான்று வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அந்தக் குழந்தை குறித்து முன்னுக்குப்பின் முரணாகத் தெரிவித்ததால் சந்தேகப்பட்ட விஸ்வநாதன், சுடர்விழியிடம் கடுமையாக விசாரிக்க அக்குழந்தை முறைகேடான வழியில் பெறப்பட்டதை அறிந்துகொண்டார்.
"சட்ட விரோதமாக குழந்தை வைத்திருப்பது குற்றம். வேறு ஒருவரின் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் கோரினால் போலீசில் மாட்டிக் கொள்வோம். எனவே குழந்தையை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்து விடலாம்'' என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையை சேர்ப்பது குறித்து விசாரித்தார். அலுவலக ஊழியர்கள் குழந்தையைப் பற்றி விசாரிக்கையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே சந்தேகமடைந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
மாவட்ட குழந்தைகள் அலுவலர் அரவிந்த் கூறுகையில், "தனது உறவினரிடமுள்ள குழந்தையை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று விஸ்வநாதன் விசாரித்தார். குழந்தை குறித்த விவரங்களை கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரண்பாடாகப் பதிலளித்ததால் புதுச்சத்திரம் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தோம். எங்களது ஊழியர்கள் சுடர்விழி வீட்டிற்கு சென்று குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்'' என்றார்.
சிதம்பரம் டி.எஸ்.பி. ரகுபதி தலைமையிலான போலீசாரின் விசாரணை குறித்து காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, "சுடர்விழியின் மகளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது மெஹருன்னிஷாவிடம் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. பேச்சுவாக்கில் ‘கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவமும் பார்க்கிறேன். சிலர் முறைகேடாகப் பெற்றெடுக்கும் குழந்தையை வாங்கி விற்பனையும் செய்து வருகிறேன்' என மெஹருன்னிஷா கூறியுள்ளார். அதையடுத்து சுடர்விழி தனது உடல்நலமில்லாத ஆண் குழந்தைக்குப் பதிலாக வேறொரு குழந்தையை கடந்த 13.12.2022 அன்று மெஹருன்னிசாவிடம் 3,50,000 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். அந்த குழந்தையை மெஹருன்னிஷா வடலூர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ஆனந்தனிடம் வாங்கியதாகக் கூறினார். ஆனந்தனைப் பிடித்து விசாரித்ததில், கீரப்பாளையம் நரிக்குறவர் காலனி கஜேந்திரன் மனைவி ஷீலா மற்றும் சீர்காழி சட்டநாதபுரம் ஆனந்தன் ஆகியோர் மூலம் குழந்தையை வாங்கியதாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மெஹருன்னிஷா, சுடர்விழி, ஆனந்தன், சீர்காழி ஆனந்தன், ஷீலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மெஹருன்னிஷா திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவம் படித்து வடலூரில் ஒரு லாட்ஜில் சித்த மருத்துவம் செய்து வந்துள்ளார். 2017-ல் ஜெயங்கொண்டம் மீன்சுருட்டி பகுதியில் 3 குழந்தைகளை ரூபாய் 6 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு விற்க முயன்றபோது பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்தவர், வீட்டிலிருந்தபடியே மருத்துவம் பார்த்ததோடு தாயாரிடமிருந்து மந்திரம் ஓதுவதையும் கற்றுக்கொண்டு செய்து வந்தார். கர்ப்பத்தைக் கலைக்கும்படி யாரேனும் வந்தால் ‘கருவைக் கலைக்க வேண்டாம், பெற்றெடுத்ததும் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்' எனக்கூறி குழந்தையை வாங்கி குழந்தை இல்லாதவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார்.
இவரிடம் வடலூர் ஆனந்தன் புரோக்கராக செயல்பட்டுள்ளார். நரிக்குறவர் குடியிருப்பிலிருப்பவர்களில் குழந்தையை வளர்க்க முடியாதவர்களிடம் குறைந்த விலைக்கு குழந்தைகளை வாங்குவதில் புரோக்கராக இருந்துள்ளார். இத்தொழிலின் மூலம் ஆனந்தன், மாடி வீடு, சொகுசு காரென ஆடம்பர வாழ்க்கைக்கு மாறினார். சில ஆண்டுகளாக நரிக்குறவர் குடியிருப்புகளில் பிறக்கின்ற குழந்தைகள் காணாமல் போன சம்பவங்களில் இந்த கும்பலுக்குத் தொடர்பிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.
சுடர்விழியிடம் கைப்பற்றப்பட்ட குழந்தையை கடலூர் ரயில்வே பகுதியோரம் வசிக்கும் ஆனந்தனின் உறவினரான நந்தினி பெற்றெடுத்ததாகக் கூறினார். நந்தினியை விசாரித்தாலோ, பெரியப்பட்டு பகுதியில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த நடராஜனுக்கும், பிரியா என்ற பெண்ணுக்கும் ஏற்பட்ட பழக்கத்தில் கடலூர் அரசு மருத்துவமனையில் ப்ரியா பெற்றெடுத்த குழந்தை என்று தெரியவந்தது. நந்தினிக்கும் ப்ரியாவுக்குமான பழக்கத்தில் குழந்தையை மெஹருன்னிசா மூலம் 3.20 லட்சத்துக்கு விற்றுள்ளது தெரியவந்தது. ஆனால் ப்ரியாவுக்கு சில ஆயிரங்களை மட்டுமே கொடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட ப்ரியா மற்றும் நடராஜனை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து சிதம்பரம் டி.எஸ்.பி. ரகுபதி, "வடலூர் சித்த மருத்துவர் மெஹருன்னிசாவும், ஆனந்தனும் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற குழந்தை விற்பனையால் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். இந்தக் குழந்தையை சுடர்விழி வளர்ப்பதற்காக வாங்கினாரா, வேறு யாருக்காவது விற்பதற்காக வாங்கினாரா என்று விசாரித்து வருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள்'' என்றார். குழந்தைகள் விற்பனை குறித்து தமிழ்நாடு முழுக்க சோதனையிட்டால் பல நெட்வொர்க்குகள் சிக்கக்கூடும்!