ADVERTISEMENT

மத்திய, மாநில அரசுகள் 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் மக்கள் திரல் போராட்டத்தை நடத்துவோம்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

01:36 PM Jun 30, 2019 | santhoshb@nakk…

கடலூர் மாவட்ட தி.மு.க சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் மக்களவை தேர்தலில் மதசார்பற்ற கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது “தேர்தல் நேரத்தில் யார் யாரோ சொன்னார்கள். தலைவர் கலைஞர் இல்லாத இடத்தை ஸ்டாலினால் பூர்த்தி செய்ய முடியாது, ஸ்டாலினுக்கு அந்த தகுதி இருக்கிறாதா? என்றார்கள். கலைஞர் இல்லாத வெற்றிடத்தை வெற்றி இடமாக நிரப்பி நாம் காட்டியுள்ளோம். பெரிய டாக்டர், சின்ன டாக்டர் சொன்னார்கள், டாக்டர் அம்மாவும் சொன்னார்கள், திமுக அழிந்து விடும், இந்த தேர்தலோடு முடிந்து விடும்’ என்றார்கள். இப்படி சொன்னவர்கள் எல்லாம் அப்பாவி அரசியல் தலைவர்களாக, அரசியல் அனாதைகளாக ஆகி விட்டார்கள். அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், எப்போதும் சொல்வேன் திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது. நம்முடைய கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணியாக அமைந்தது. அதனால் வெற்றியும் பெற்றது. நமது கூட்டணி கடந்த 2 ஆண்டு காலமாக மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து, மத்திய மாநில, அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தோம். அதே போல் மக்களவைத் தேர்தலில் நாற்பதும் நமதே என்ற பிரச்சாரத்தை முன் வைத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறோம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒன்றரை ஆண்டுகால ஆட்சி இருக்கிறது என்கிறார்கள். இந்த ஆட்சியின் ஆயுள் முடிந்து விடுமா அல்லது அதற்கு முன் கவிழ்ந்து விடுமா? என்று கேள்விகள் எழுந்துள்ளன. நான் சொல்கிறேன் இந்த ஆட்சி விரைவில் கவிழப்போகிறது. அதுதான் உண்மை. தமிழ்நாட்டில் ஆ ட்சி மாற்றம் ஏற்படவில்லையே என்று நம்மில் சிலருக்கு சோர்வு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இடைத்தேர்தலில் மக்கள் 13 இடங்களில் நம்மை வெற்றி பெற வைத்திருப்பதன் மூலம் மக்கள் இந்த ஆட்சியை மாற்ற விரும்பியிருக்கிறார்கள். அதுபோல் 38 எம்பிகள் வெற்றி பெற்று என்ன செய்யப் போகிறார்கள் என்றார்கள். ஆனால் புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்கும் மும்மொழி கொள்கையை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறோம். ரயில்வே துறையில் இந்தியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறோம். மக்களவையில் தமிழின் பெருமையை உணர்ந்திருக்கிறோம், திராவிடத்தை உயர்த்திப் பிடித்து இருக்கிறோம். நாங்கள் கேட்கிறோம் ஒரு முதல்வர், ஒரு துணை முதல்வர், 32 அமைச்சர்கள் இருந்து என்ன பயன்? தவித்த வாய்க்கு தண்ணீர் தர முடியாத அரசாக, ஒரு குடம் தண்ணீர் கொடுக்க வக்கில்லாத ஆட்சியாகவும் இருக்கிறது.


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாம் போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். அப்படி தீர்வு கிடைக்காவிட்டால் மக்களை அணி திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கிறேன். அதுபோல் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, மேகதாது அணை கட்ட எதிர்ப்பு என தொடர்ந்து மக்கள் பிரச்சனைக்காக போராட இருக்கிறோம். எடப்பாடி முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. ஒரு விபத்தில் முதல்வராகி இருக்கிறார். இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் இருப்பதால் மீண்டும் தேர்தல் வைத்தாலும் அதிமுக வரப்போவதில்லை. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள், இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.

எதிர்வரும் சட்டசபை தேர்தலிலும் நமது அணி வெற்றி பெறும். அப்போது தவறு செய்த இவர்கள் எங்கே ஓடினாலும் நாம் விட மாட்டோம்” என்றார். இந்த பொதுக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், சிதம்பரம் தொல்.திருமாவளவன், புதுச்சேரி வைத்திலிங்கம், சேலம் பார்த்திபன், கள்ளக்குறிச்சி பொன்.கவுதமசிகாமணி, புதுச்சேரி மாநில அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார், காரைக்கால் நாஜிம், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், எம்.எல்.ஏக்கள் சபா.ராஜேந்திரன், துரை.கி.சரவணன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பேசினார்கள். இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT