ADVERTISEMENT

இறந்தவர்களின் உடல்களுக்கு எதிர்ப்பு! வெவ்வேறு இடங்களில்  தகராறு - மறியல்! 

11:04 AM Sep 15, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

மாதிரி படம்

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் நேற்று முன்தினம் (13.09.2020) உடல்நிலை குறைவால் இறந்த நிலையில், அவரது உடலை நேற்று அவரது உறவினர்கள், வழக்கமாக அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது போட்டியிட்டு வென்ற அய்யாசாமி என்பவரை எதிர்த்து போட்டியிட்ட வரதராஜ் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரிவாள், கட்டை, ஈட்டி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கொண்டு, இறந்துபோன சேகர் உடலை அடக்கம் செய்யவிடாமல், துரத்திக்கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன குப்பநத்தம் புதியகாலனியை சேர்ந்த சேகர் உறவினர்கள பிணத்தை சுடுகாட்டில் அடக்கம் செய்யாமல் பயத்துடன் தெறித்து ஓடி உள்ளனர். மேலும் உடலை அடக்கம் செய்வதற்காக வழி நெடுக அடிக்கப்படும் மேளங்களை கிழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அக்கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இறந்துபோன சேகர் உடல் அடக்கம் செய்யாமல் சுடுகாட்டில் அநாதையாக கிடந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் பிணம் எரிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் போலீஸார் காவலில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இதேபோல் பெண்ணாடம் பகுதியை சேர்ந்த கூடலூர் கிராமத்தில் வசிக்கும் 76 வயது முதியவரான கனகசபை என்பவர் நேற்று வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 200 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு பிரிவினர் இறந்தால் திட்டக்குடி - விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள கூடலூர் கிராமத்தில் புதைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டின் அருகில் சின்னதுரை மகன் சக்திவேல் என்பவர் வீடு கட்டி குடி அமர்ந்துள்ளார். தற்சமயம் சம்பந்தப்பட்ட பிரிவினரின் சடலம் புதைக்கப்பட்டுவந்த இடத்தில் புதைக்கக்கூடாது என்று இரு தரப்பினருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் கனகசபையின் உடலை புதைப்பதற்காக சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஊர்வலமாக கனகசபையின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த தனிநபர் ஒருவர் இந்த இடத்தில் புதைக்கக்கூடாது என தடுத்து நிறுத்தி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து இறந்துபோன கனகசபையின் உடலை வைத்து திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திட்டக்குடி காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானமடைய மறுத்த ஊர் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேலன், திட்டக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் சமூகநல பாதுகாப்பு தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினரும் மற்றும் காவல் துறையினரும் அவருடன் பேச்சுவார்த்தை செய்து இறந்துபோன கனகசபையின் உடலை அடக்கம் செய்வதற்கு கொண்டு சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT