viruthachalam issue two parties

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் பரவலூர் ஊராட்சி மன்றத் தலைவராக பூமாலை என்பவர் பதவிவகித்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தலின்போது இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காந்தி என்பவர் தரப்பினருக்கும், பூமாலை தரப்பினருக்கும் இடையே தேர்தல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காந்தி தரப்பை சேர்ந்த சன்னியாசி (85) என்பவர் நேற்று உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவரது இறுதி ஊர்வலம் அப்பகுதியில் உள்ள தெற்கு தெரு வழியாக நடந்தது.

Advertisment

அந்த தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் சாலை மீது உடலை எடுத்து வரக்கூடாது என ஊராட்சி மன்றத் தலைவரான பூமாலை தரப்பை சேர்ந்தவர்கள் எச்சரிக்கும் தோனியில் தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகி ஒருவரை ஒருவர் கழி, கத்தி, கட்டையால் தாக்கிக்கொண்டனர். அப்போது இறுதி ஊர்வலத்தில் வந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து, இறுதி ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மோதலுக்கு காரணமான ஊராட்சி மன்றத் தலைவர் பூமாலை உட்பட ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்த விருதாச்சலம் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.