ADVERTISEMENT

ஊரடங்கு உத்தரவு : நஷ்டத்தைச் சந்திக்கும் பீங்கான் பொருள் உற்பத்தியாளர்கள் !

11:26 AM Apr 06, 2020 | santhoshb@nakk…


கடலூர் மாவட்டம் விருத்தாசலம், நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளை களிமண் அதிக அளவில் கிடைக்கிறது. இதனைக் கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் 1965- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் விருத்தாசலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் பீங்கான் தொழிற்பேட்டையை அப்போதைய மத்திய தொழில்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார்.

இங்கு 44 ஏக்கரில் தமிழ்நாடு அரசு பீங்கான் உற்பத்தி நிறுவன நிர்வாகத்தின் கீழ் கற்குழாய் தொழிற்சாலை, பீங்கான் கலைப் பொருட்கள் உற்பத்தி கூடம், செராமிக் மூலப் பொருட்கள் விற்பனை நிலையம், பீங்கான் பொருட்களைச் சூடேற்றும் கில்லன் உள்ளிட்ட பிரிவுகளும், 56 ஏக்கரில் 61 செராமிக் தொழிற்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.வருவாய்ப் பெருகியதால் மேலும் பலர் ஆர்வத்துடன் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT


இத்தொழிற்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ளள பகுதிகளில் டீ கப், வாட்டர் பில்டர், எலக்ட்ரிக் ஹீட்டர், சுவாமி சிலைகள், தலைவர்கள் சிலைகள், பறவைகள், செடிகள், மரங்கள், பூக்கள், இயற்கைக் காட்சிப் பொருட்கள்,வாஷ்பேசின், அகல் விளக்குகள், சானிட்டரி பொருட்கள் மற்றும் மின்சாரத்துறைக்கு தேவையானப் பியூஸ்கேரியர் உள்ளிட்ட 100- க்கு மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

200- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாகவும் பீங்கான் பொருட்களைத் தயாரித்து வருகின்றனர்.மேலும் இவைகளில் 5,000- க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வருவாய் ஈட்டி வருகின்றனர். இங்குச் செய்யப்படும் அனைத்து பீங்கான் பொருட்களையும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் அறிவித்த 144-தடை மற்றும் ஊரடங்கு உத்தரவால் 50- க்கும் மேற்பட்ட நிறுவனங்களும்,200- க்கும் மேற்பட்ட குடிசை தொழிற் கூடங்களும் மூடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT


இதனால் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு இடங்களில் கடன் பெற்று செராமிக் பொருட்களைத் தயாரித்த நிலையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் பெரிய அளவில் நஷ்டம் அடைந்துள்ளதாகவும், இந்நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கு ஒரு வருட காலம் கடினமாகப் போரட வேண்டும் என்றும் கவலையுடன் தெரிவிக்கின்றனர் தொழிற்துறையினர்.

மேலும் வருகின்ற தீபாவளி மற்றும் கார்த்திகை தீபம் விழாக்களுக்காகப் பயன்படுத்தப்படும் அகல் விளக்குகள் செய்யும் பணிகளைத் தற்போது தொடங்கினால் மட்டுமே ஐப்பசி, கார்த்திகை மாதத்திற்குள் தயாராகும் என்றும், மூலப்பொருட்கள் கொண்டு வருவதற்குத் தடை ஏற்பட்டுள்ளதால் எவ்விதப் பணியும் செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.


இரண்டு மாதத்திற்குப் பின்பு செராமிக் பணியைத் தொடங்கினால் மழைக்காலம் ஏற்பட்டு விடுவதால் செராமிக் பொருட்கள் வெயிலில் உலர வைப்பது முடியாத காரியம் என்பதால் அனைத்து விதத்திலும் பீங்கான் தொழில் மிகவும் பாதிப்படைந்து பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்கின்றனர்.

இதேபோல் இந்நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த சுற்று வட்டாரப் பகுதி தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வருமானத்தை ஈட்ட முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவிக்கின்றன. மேலும் தங்களின் அத்தியவாசியத் தேவை பொருட்களை வாங்குவதற்கு தாங்கள் வேலை செய்யும் முதலாளிகளிடம் கேட்பதாகவும், அவ்வாறு கேட்கும் போது வங்கியில் பணம் எடுக்க முடியவில்லை,வியாபாரிகள் பணம் அனுப்பவில்லை என்று அவர்களின் கஷ்டத்தைத் தெரிவிப்பதாகக் கூறுகின்றனர். இதனால் அன்றாடச் செலவுகளுக்கு கூட அல்லாடுகின்றனர் கூலித் தொழிலாளர்கள்.


தமிழகத்திலேயே விருத்தாச்சலத்தில் மட்டும் செயல்படும் பீங்கான் தொழிற்பேட்டை முற்றிலுமாக முடங்கிப் போனதால் தங்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட தமிழக அரசு நிவாரண உதவி அளிக்க வேண்டுமென்று சிறு, குறு முதலாளிகளும், தொழிலாளர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT