ADVERTISEMENT

அலையாத்தியை அழிக்க எமனாக வரும் ஹைட்ரோகார்பன் 

10:38 AM May 22, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் பிச்சாவரம் அமைந்துள்ளது. பிச்சாவரத்தில் இயற்கையின் அரணாக கடல் முகத்துவாரத்தில் சதுப்பு நிலப் பகுதியில் அலையாத்தி காடுகள் 5 ஆயிரம் ஏக்கர் ச.மீ பரப்பளவில் இயற்கைசூழலுடன் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்தக் காட்டில் மருத்துவகுணம் கொண்ட சுரப்புண்ணை , தில்லை, திப்பராத்தி, வெண்கண்டல்,நீர்முள்ளி, பண்ணுக்குச்சி, நரிகண்டல், கருங்கண்டல் எனும் 20 வகையான தாவரங்களும், வங்காரவாசி, உயிரி, கோழிக்கால், உமிரி, சங்குசெடி, பீஞ்சல் உள்ளிட்ட 18 வகையான மூலிகை தாவர செடிகள் உள்ளது.

அரிய வகை மருத்துவ குணம் கொண்ட இந்த வனப்பகுதியை தமிழக வனத்துறை கட்டுபாட்டில் பராமரித்து வருகிறது. இந்த காடுகளிலுள்ள அரிய வகை மூலிகை மற்றும் மருத்துவ குணம் கொண்ட மரங்களை ஆய்வு செய்ய அண்ணாமலை பல்கலைக்கழக தாவரவியல் துறை மாணவர்கள். வெளிநாடுகளில் தாவரவியல் கல்வி கற்கும் மாணவர்கள் பிச்சாவரத்திற்கு வந்து தங்கி இந்த பகுதியிலுள்ள அரிய வகை மூலிகை செடிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் பல பேர் ஆராய்ச்சிக்கான டாக்டர் பட்டத்தையும் பெற்றுள்ளனர்.


இந்த அலையாத்தி காட்டில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்வாய்களும் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டவையாக உள்ளது. இதனால் இந்த இயற்கை எழில் அழகை ரசித்து செல்ல உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பிச்சாவரம் அலையாத்தி காடுகளுக்கு வந்து சதுப்பு நிலத்தில் படகு சவாரி செய்ய தினந்தோறும் வருகை தருகின்றனர். கோடை காலங்களிலும் பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் அரசு விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தவாறு உள்ளது.

மேலும், கடந்த 2004ஆம் ஆண்டு இந்த பகுதியில் சுனாமி பேரலை ஏற்பட்டது. அப்போது பரங்கிப்பேட்டை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஆனால் அதன் அருகிலே உள்ள பிச்சாவரத்தை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் வசிக்கும் மக்களை சுனாமியிலிருந்து இந்த அலையாத்தி காடுகள் பாதுகாத்தது. இதனால் இந்த பகுதியில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இப்படி உலகப் புகழ் பெற்ற இந்த அலையாத்தி காடுகளுக்கு தற்போது மோடியின் தலைமையிலான பிஜேபி அரசு ஹைட்ரோகார்பன் என்ற திட்டத்தின் மூலமாக பிச்சாவரம் காட்டுப்பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு கிணறு அமைக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

இதனால் இந்த பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள், அரியவகை மரங்கள், செடிகள் மூலிகைச் செடிகள், அழியும் நிலையை நோக்கி செல்லும் மேலும் இந்த பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் சுற்றுலா மையம் அதை நம்பியுள்ள குடும்பங்கள், மீனவர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தால் வாழ்வாதாரத்தை இழக்க கூடிய நிலை ஏற்படப்போகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த காலங்களில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்தது. மேலும் இந்த திட்டங்கள் குறித்து தற்போது விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கரவாகனம் மூலம் கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்யவும் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் குறித்து காவிரி டெல்டா நீர் ஆதார அமைப்பின் தலைவரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கிள்ளைரவீந்திரன் கூறுகையில், ஆரம்ப காலத்தில் சிதம்பரம் நகரம் என்பது தில்லை வனகாடுகளாக இருந்துள்ளது. இதனால் தற்போதும் சிதம்பரத்தை தில்லை என்றும் கூறுவார்கள்.

தில்லை மரங்கள் தற்போது பிச்சவாரம் அலையாத்தி காடுகளிலும் நடராஜர் கோயில் நந்தவனபகுதியில் மட்டும் உள்ளது. இது கோயிலின் தலவிருட்ஷம். இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிச்சவாரம் பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளிலுள்ள தில்லைமரங்கள் அழிந்துவிடும். எனவே தான் அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து தில்லை மரக்கிளைகளை தட்டில் வைத்து நடராஜரே உன் தலவிருட்ஷத்தை காத்துகொள் என்று கோயிலின் கருவறையில் பூஜை செய்ய கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம். இதுமட்டுமில்ல இந்த திட்டம் நிறைவேற்றினால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதரத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே விவசாயிகள், விவசாய சங்கங்கள்,பொதுமக்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் எந்த வித்தியசம் இல்லாமல் ஒருங்கிணைந்து போரடவேண்டும் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT