ADVERTISEMENT

ரூபாய் ஒன்றே கால் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்! 3 பேர் கைது! 3 பேருக்கு வலை!

12:49 PM Aug 16, 2020 | rajavel

ADVERTISEMENT

கடலூர் அருகே உள்ள கே.என் பேட்டை திருப்பதி நகரில் உள்ள ஒரு வீட்டில் வீடு முழுவதும் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, உள்ளிட்ட போதைப் பொருட்கள் டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிக்கும் சப்ளை செய்யப்படுவதாகவும், தற்போது அந்த வீடு பூட்டியே கிடப்பதாகவும் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ADVERTISEMENT

அதையடுத்து சாந்தி தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கே.என்.பேட்டை திருப்பதி நகரில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீட்டில் அதிரடியாக சென்று பூட்டியிருந்த அந்த வீட்டை உடைத்து சோதனை செய்தனர். அந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை மற்றும் புகையிலைப் பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

1,21,12,740 ரூபாய் மதிப்பிலான சுமார் 7 டன் 753 கிலோ அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போதை பாக்கு மற்றும் ஹான்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் அந்த வீட்டை நேரில் ஆய்வு செய்து குற்றவாளியை உடனடியாக விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.



அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போதைப் பொருட்களை அந்த வீட்டில் பதுக்கி வைத்தது யார்? அவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? எந்தெந்த கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் திருப்பாதிரிப்புலியூரில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் பாரதி என்பவர் மகேஸ்வரியின் வீட்டை வாடகைக்கு எடுத்து, வீட்டில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்து மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்து வந்ததும், அவர் மீது ஏற்கனவே போதைப்பொருட்கள் விற்றதாக வழக்கு உள்ளதாகவும் தெரியவந்தது.

அதையடுத்து திருப்பாபுலியூர் போடிசெட்டி தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் பாரதி(36)யை கைது செய்து விசாரித்தனர். மேலும் அவருக்கு பிடாரி அம்மன் கோவில் தெரு ராஜேந்திரன் மகன் சரவணன் (49), சாவடி, ரட்சகர் நகரை சேர்ந்த கேசவன் மகன் ராம்குமார்(19), கே.என்.பேட்டை செல்வராஜ் மகன் பிரசாந்த், அதே தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் தேவநாதன், நெல்லிக்குப்பம் கணபதி ஆகியோர் உடந்தையாக இருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து பாரதி, சரவணன், ராம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாரதியிடம் விசாரித்ததில், "தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பெங்களூரிலிருந்து மொத்த வியாபாரி ஒருவர் வாங்கி காய்கறி மூலம் அனுப்பி வைப்பார். இதை நான் வீட்டில் பதுக்கி வைத்து கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்தேன்" என கூறியுள்ளார். இதனிடையே மேலும் தலைமறைவாகவுள்ள 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT