ADVERTISEMENT

“பயிர் உயிருக்குச் சமம்” - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

02:17 PM Jul 30, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த 26, 27 ஆம் தேதி என இரு நாட்கள் நடைபெற்றது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். நிலம் கையகப்படுத்தும் போது வழங்கப்பட்ட இழப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் பாமக சார்பில் என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. பின்னர் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அன்றைய தினம் கால்வாய் வெட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அதனை தொடர்ந்து வளையமாதேவியில் விளைநிலங்களை அழித்து மீண்டும் கால்வாய்க் கரைகளைப் பலப்படுத்தும் பணிகளை என்.எல்.சி. நிறுவனம் நேற்று மீண்டும் தொடங்கியது. இந்த பணி நான்காவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது குறித்து பேசுகையில், “ என்.எல்.சி நிர்வாகம் சார்பில் பயிர்களை அழிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பயிர் உயிருக்குச் சமம். ஏற்கனவே கையப்படுத்தபட்ட நிலம் என்றால் ஏன் பயிரிட அனுமதிக்கப்பட்டது. பயிரிடப்பட்டு விட்டதால், அறுவடை செய்யும் வரை காத்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT