ADVERTISEMENT

காவிரி போராட்டம் பற்றி கேலி விமர்சனம் - ஜெயக்குமாருக்கு துரைமுருகன் எச்சரிக்கை

11:40 PM Apr 05, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பதவிகளைக் காப்பாற்றவும் - ஊழல் கொள்ளைகளை மறைக்கவும் - தமிழகத்தை பாலைவனமாக்கி பாஜவுக்கு காவடி தூக்கும் ‘குதிரை பேர’ அதிமுக அரசு - திமுக மீது பழிசுமத்த வேண்டாம் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், கழக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

ADVERTISEMENT

‘’காவிரி நதி நீர்ப்பிரச்சினையில் தமிழகத்திற்கு மறக்கவும், மன்னிக்கவும் முடியாத அடுக்கடுக்கான பல துரோகங்களை அடுத்தடுத்து செய்துவிட்டு, இன்றைக்கு விவசாயிகளை வேதனைத்தீயில், அதிமுக அரசு தள்ளி விட்டுள்ளது. ஆனால், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “அரசின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளராக” இருந்து கொண்டு, “மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கவும், ஆட்சியைக் கலைக்கவும் காவிரிப்போராட்டத்தில் அரசியல் செய்கிறார்”, என்ற நகைச்சுவையான குற்றச்சாட்டை நாகூசாமல் முன்வைத்து, இன்று தமிழகம் முழுவதும் காவிரிக்காக வெற்றிகரமாக நடைபெற்ற தன்னெழுச்சியான முழு அடைப்புப் போராட்டத்தையும், சாலை மறியல்களையும் கேலி செய்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மக்களின் ஜனநாயகரீதியிலான அறப்போராட்டத்தின் எழுச்சியைப் பார்த்து, “தமிழகத்திற்கு நியாயம் வழங்கப்படும், பொறுமையாக இருக்க வேண்டும்”, என்று உச்சநீதிமன்றத்தின் மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களே கூறியிருக்கின்ற நிலையில், அதிமுக அமைச்சரும், துணை முதலமைச்சரும், முதலமைச்சரும் தமிழ்நாட்டில் நடக்கும் காவிரிப் போராட்டங்களை தங்களின் சுயநலனுக்காகவும், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் திரித்தும், பழித்தும் பேசிவருவது தமிழகத்திற்கு செய்யும் முதல் துரோகம்.


அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமல்ல, நேற்றைய முன்தினம் (3.4.2018) நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னறிவிப்பின்றி கலந்து கொண்டு பேசியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “1974ல் காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறிவிட்டது தி.மு.க”, என்று தொடர்ந்து கர்நாடக மாநிலம் எடுத்துவைத்து வரும் அதே வாதத்தை, தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் காவிரி நதிநீர் உரிமை மீட்புக்காக உயிரைத் துச்சமென மதித்துப்போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், கர்நாடகத்திற்கு உதவிடும் வகையில் பேசியிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


அதிலும் குறிப்பாக, “சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து புதுப்பிக்கத் தவறி விட்டது”, என்று முதலமைச்சர் ஒரு அப்பட்டமான கோயபல்ஸ் பிரச்சாரத்தைச் செய்திருக்கிறார். முதலில் காவிரி பற்றி பேசும் முன்பு, காவிரிப் பிரச்சினையைப் பற்றிய விபரங்களை நன்கு படித்துத் தெரிந்து கொண்டு அல்லது அதிகாரிகளிடம் ஆலோசித்து அறிந்து கொண்டு பேசியிருக்கவேண்டும். இப்படி அரையும்குறையுமாகப் பேசியிருப்பது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல.


1924 காவிரி நதிநீர் ஒப்பந்தம் 1974ல் புதுப்பிக்கப்பட வேண்டிய ஒப்பந்தம் அல்ல என்பதை தவறாமல் நினைவில் கொள்ளவேண்டும். இந்த வாதத்தை கர்நாடக மாநிலம் மட்டுமே திரும்பத் திரும்ப எடுத்துவைத்து வருகிறது. தமிழ்நாட்டில் அதே கருத்தை கர்நாடகத்தின் ஊதுகுழல் போல அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பிலேயே “1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் இப்போதும் செல்லும். அந்த ஒப்பந்தம் 1974-ல் காலாவதியாகி விட்டது என்ற கர்நாடக அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது”, என்று தெளிவுபடுத்தி விட்டுத்தான் காவிரி இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதை அதிமுகவின் அமைச்சர்கள் நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.


உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர், காவிரி நடுவர்மன்றத் தலைவராக இருந்து அளித்த தீர்ப்பை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படித்துப் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் யாருடைய சுயலாபத்திற்காக அதை மாற்றித் திரித்துப் பேசத்துடிக்கிறார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

முதலமைச்சர், மத்தியில் உள்ள பா.ஜ.க.விற்கு மட்டுமல்ல, கர்நாடகவில் உள்ள பா.ஜ.க.விற்காகவும் இதுபோன்ற சொத்தையான வாதத்தை முன்வைத்துப் பேசி, அவர்களுக்கு நேரடியாகவே உதவிட முடிவு செய்திருப்பது, தமிழகத்திற்கு இழைக்கும் பெரிய அநீதி.


இந்த அநீதியைத் தமிழக மக்கள், குறிப்பாக விவசாயப் பெருமக்கள் ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல, சிறிதுகூடப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். அதுமட்டுமின்றி திமுக ஆட்சியில் இல்லாதபோது, 1976 பிப்ரவரி மாதத்தில் அமைக்கப்பட்டு, ஒரு புகாரைக்கூட நிரூபிக்க முடியாமல் போய்விட்ட உப்புசப்பில்லாத, ஒருவித பயனுமற்ற சர்க்காரியா கமிஷனுக்கும், 1974ல் காலாவதியாகாத காவிரி நதி நீர் ஒப்பந்தத்திற்கும் முடிச்சுப்போடுவது ‘மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் முயற்சி’ என்பதை, தன் எஜமானர்களான மத்திய பாஜகவையும், கர்நாடக மாநில பாஜகவையும் குளிர்விக்கும் முயற்சியில் மறந்து விட்டார் முதலமைச்சர் எடப்பாடி.


எனவே, கடந்தகால நிகழ்வுகளின் அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளாமல், யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து, கழகத்தின் மீது குறைசொல்லி, பொய்களை எடுத்துப் பேசியிருப்பது முதலமைச்சர் பதவிக்குத் தகுதி உடையதுதானா என்பதை அவர் எண்ணிப்பார்க்க வேண்டும். அடுத்து, “2007 முதல் 2013 வரை காவிரி இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடவில்லை”, என்று மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யைச் சொல்லி வருகிறார் முதலமைச்சர்.

2007ல் வெளிவந்த நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பு குறித்து, தமிழகம் உள்ளிட்ட அனைத்து காவிரி நதி நீர் மாநிலங்களும் இந்திய உச்சநீதிமன்றத்திலும், நடுவர் மன்றத்திலும் மேல்முறையீடு செய்திருந்த காரணத்தால்தான் காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பு அரசிதழில் வெளியிடவில்லை என்ற அடிப்படைத் தகவலை முதலமைச்சர் உணராமல் பேசியிருப்பதன் மூலம், அவருக்கு காவிரி வரலாறும் தெரியவில்லை, நடுவர்மன்றத்தின் தீர்ப்பும் புரியவில்லை, சர்க்காரியா கமிஷன் விசாரணையின் பின்னணியையும் அறிந்து கொள்ளவில்லை என்பதை அவராகவே முன்வந்து ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.


இதே உண்ணாவிரதத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “எம்.ஜி.ஆர் எழுதிய கடிதத்தை அடிப்படையாக வைத்துத்தான் காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது”, என்று எவரெஸ்ட் சிகரம் போல் உயர்ந்து நிற்கும் தலைவர் கலைஞரின் காவிரி சாதனையை எளிதில் மறைத்து விடலாம் என்று வீண்முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் சுட்டிக்காட்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்த 1986-ல் எழுதப்பட்ட கடிதத்தில், “காவிரிப் பிரச்சினையில் மத்தியஸ்தம் தேவை என்ற தமிழகத்தின் முதல் குரல் 5.9.69ல் எழுப்பப்பட்டது”, என்றும், அதன்பிறகு “நடுவர் மன்றம் அமைக்க 17.2.1970ல் தமிழக அரசு கடிதம் எழுதியது”, “தமிழ்நாடு சட்டமன்றத்தில் 8.7.71 அன்று காவிரி நடுவர் மன்றம் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது”, என குறிப்பிடப்பட்டு, முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகளை, எம்.ஜி.ஆர் ஆட்சியின் கடிதத்திலேயே சுட்டிக்காட்டியிருப்பதை படிக்கத் தவறியது ஏன்? உண்மைகளை மறைப்பது ஏன்?


ஆகவே, காவிரி நடுவர் மன்றம் தி.மு.க. ஆட்சியின் சாதனையே தவிர அதிமுகவின் சாதனை இல்லை என்பதை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தெரியவில்லை என்பது வேதனையளிக்கிறது.

ஒருவேளை, தெரியவில்லையா அல்லது தெரிந்திருந்தும் பேசும் துணிச்சலில்லையா? தர்மயுத்தத்தால் கிடைத்த விளைச்சல் கண்ணை மறைத்துவிட்டதா? எல்லாவற்றுக்கும் மேலாக காவிரி விவகாரங்களை கவனிக்கும் பொதுப்பணித்துறை இப்போது முதலமைச்சரிடம் இருக்கிறது. ஏற்கனவே இந்தத் துறையை துணை முதலமைச்சர் கவனித்திருக்கிறார்.


ஆனால் 16.2.2018 அன்று வெளிவந்த உச்சநீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்பில் “ஸ்கீம்” என்பது பற்றி தெளிவாக குறிப்பிட்டும், “ஸ்கீம்” என்பது காவிரி மேலாண்மை வாரியம் என்று மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சட்டத்தின் பிரிவுகளில் அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டிருந்தும், காவிரி தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நடைபெற்ற தினத்தில், மாண்புமிகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள், “ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தை மட்டும் உள்ளடக்கியது அல்ல”, என்று கூறியதை, “ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல”, என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக தமிழகத்தில் திட்டமிட்டு செய்யப்படும் விஷமப் பிரச்சாரத்தை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஏற்றுக் கொண்டிருப்பதைப் போல, இதுவரை கண்டிக்காமலும், உண்ணாவிரதம் என்ற பெயரில் பா.ஜ.க.வை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமலும் மத்திய பாஜகவோடு கூட்டு சேர்ந்து “கபட நாடகம்” ஆடுவதைப் பார்த்து தமிழக மக்கள் வெட்கித் தலைகுனிகிறார்கள்.


மக்களின் ஜனநாயரீதியான காவிரிப் போராட்டத்தின் முனையை மழுங்க வைத்து திசைதிருப்ப, ஏதாவது ஒருவகையில் தி.மு.க. மீது வீண்பழி சுமத்தி, மத்திய பா.ஜ.க. அரசுக்கும், கர்நாடக பா.ஜ.க.விற்கும் எந்தவகையில் உதவுவது என்று நீண்ட ஆலோசனை செய்து, சுயநல அடிப்படையில் உருவாக்கப்பட்ட சதித்திட்டம் மட்டும் இருவரின் பேச்சுகளில் எதிரொலிக்கிறது. இதுவே, அமைச்சர் ஜெயக்குமாரின் கைவந்த கலையான புழுதி வாரித்தூற்றுதலிலும் தெரிகிறது.

ஆகவே, காவிரி நதி நீர் பிரச்சினையில் மாநில உரிமையை நிலைநாட்டுவதற்கு துணிச்சல் இல்லை என்றால், தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்களும் பதவி விலக வேண்டுமே தவிர, தமிழகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டமான காவிரிப்போராட்டத்தை கேலிசெய்து, தி.மு.க. மீது உண்மைக்குப் புறம்பான, அற்பத்தனமான தகவல்களைப் பரப்பி கழகமும், தலைவர் கலைஞர் அவர்களும் காவிரி உரிமைக்காக நிகழ்த்திய சாதனைகளை எள்ளி நகையாடி, தினந்தோறும் செய்து கொண்டிருக்கும் ஊழல், கொள்ளையிலிருந்து தப்பிக்கவும், பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் காவிரி நதி நீர் பிரச்சினையில் பா.ஜ.க.விற்கு காவடி தூக்கி, தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று காவிரி தீரத்து விவசாயிகளின் சார்பில் எச்சரிக்கை செய்திட விரும்புகிறேன்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT