ADVERTISEMENT

தீபா வசமான ஜெ. இல்லம்... அதிமுகவின் மேல்முறையீட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!

11:24 AM Dec 15, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக், தீபாவிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி ஜெ. இல்லத்தின் சாவி தீபக், தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றியது. இந்நிலையில், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிப் பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இழப்பீடு நிர்ணயம் செய்ததை எதிர்த்து ஜெ. தீபா இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை ஒன்றாக விசாரித்துவந்தது உயர் நீதிமன்றம்.

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த 24/11/2021 அன்று மதியம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சேஷசாயி தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களில் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். அந்த தீர்ப்பின்படி கடந்த 10ஆம் தேதி ஜெ. இல்லத்தின் சாவி தீபக், தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சாவியைப் பெற்றுக்கொண்ட அன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ. தீபா, “இதனை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்தால் சந்திக்கத் தயார்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி ஜெயலலிதா அறக்கட்டளை சார்பாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மனு தாக்கல் செய்த நிலையில், உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு வரும் திங்கள்கிழமை (20.12.2021) விசாரணைக்கு வர உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT