ADVERTISEMENT

“பானி பூரி கடை நடத்தக் கூடாது என போலீஸ் தரக்குறைவாக பேசுகிறார்கள்” - தர்ணாவில் ஈடுபட்ட தம்பதியர் 

06:26 PM Mar 03, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பானி பூரி கடையை நடத்தக் கூடாது என தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளரை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தம்பதியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் அபிராமி. இவரது கணவர் அரவான். இவர்கள் அரியமங்கலத்தில் தனியார் கல்லூரி அருகே தள்ளு வண்டியில் பானிபூரி கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திருவானந்தம் பானிபூரி கடையை காலி செய்ய வேண்டும் என மிரட்டுவதாகக் கூறி அபிராமி அரவான் தம்பதியினர் நேற்று இரவு 8 மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் உதவி ஆணையர், காவல் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டுச் சென்றனர்.

இது குறித்து பானிபூரி கடை நடத்தி வரும் அபிராமி அரவான் தம்பதியினர் கூறுகையில், “நாங்கள் கடந்த 9 வருடங்களாக எஸ்.ஐ.டி கல்லூரி அருகே பானிபூரி கடை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு வருடமாக அந்த பகுதியில் யாரும் கடை நடத்தக் கூடாது என எஸ்.ஐ.டி கல்லூரி நிர்வாகத்தினர் வேலி அமைத்து இருந்தனர். இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்து கடையை நடத்த அனுமதி வாங்கி நேற்று முன் தினம் (01.03.23) கடையை தொடங்கினோம். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடையை காலி செய்ய வேண்டும் இல்லையென்றால் பிராத்தல் வழக்குப் பதிவு செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

இது குறித்து நேற்று காலை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். புகார் அளித்த சிறிது நேரத்தில் எங்களது பானிபூரி கடையின் வண்டியை எடுத்து சென்றுவிட்டனர். ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் எங்களை மிரட்டி வரும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு வாழ வழியில்லை எங்களை கொன்று விடுங்கள் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT