ADVERTISEMENT

லேப் டெக்னீஷியன்களின் செயல்பாடு கண்டனத்துக்குரியது! -உயர்நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை பதில்!

08:45 AM Jul 02, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி, லேப் டெக்னீஷியன்களை நிர்ப்பந்திப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறு எனவும், மாதிரிகள் சேகரிப்பது அவர்களின் அன்றாடப் பணி எனவும், தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்க, கண், மூக்கு தொண்டை நிபுணர்களையும், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களையும் பயன்படுத்த வேண்டும் எனவும், லேப் டெக்னீஷியன்களை நிர்ப்பந்திக்கக் கூடாது என உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், தமிழக சுகாதாரத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி, லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறு. மாதிரிகள் சேகரிப்பது அவர்களின் அன்றாடப் பணி ஆகும். அதற்கான அடிப்படைத் தகுதி அவர்களுக்கு உள்ளது. பயிற்சி பெற்ற மருத்துவர்களும், மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களும் இப்பணிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். மாதிரிகள் சேகரிக்க மறுப்பதன் மூலம், லேப் டெக்னீஷியன்கள், தங்கள் கடமையைச் செய்வதில் இருந்து தவறுகின்றனர். லேப் டெக்னீஷியன்கள், மனித உடற்கூறியல் படித்தவர்கள் ஆவர்.

கண், மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்களும், மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களை மட்டுமே மாதிரிகளைச் சேகரிக்க பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறவில்லை. மேலும், தற்போது பரிசோதனைகள் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய, லேப் டெக்னீஷியன்கள் பணியமர்த்தப்படுகின்றனர். மருத்துவம் சாராத பணியாளர்கள், சுயநலமற்ற முறையில் பணியாற்றி வரும் நிலையில், லேப் டெக்னீஷியன்களின் செயல்பாடு கண்டனத்துக்குரியது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி 2- ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT