ADVERTISEMENT

"கரோனாவை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு!

06:24 PM Apr 12, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "கரோனா பரவல் தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க அதிக அளவில் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்கிறது தமிழகம். காய்ச்சல் முகாம்களை அதிகமாக நடத்துவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் காய்ச்சல் முகாம்களை 200-லிருந்து 400 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள், ஊழியர்கள் இரண்டு வாரத்திற்குள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் வீட்டிற்கு அருகேயுள்ள மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகள், நிறுவனங்களின் முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யவேண்டும். தொழிற்சாலை நிர்வாகம் மருத்துவமனையை அணுகினால் அங்கேயே வந்து தடுப்பூசி செலுத்த அரசு தயாராக உள்ளது. உணவகங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக்கூடங்கள், சந்தைகளில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் போதிய அளவில் கரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. ஏப்ரல் 10- ஆம் தேதி வரை 37.80 லட்சம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றை பொதுமக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அண்மையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் தொற்று பாதித்து இறந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு இறந்தால் எவ்வளவு வேதனைப்படுவோம் என அனைவரும் சிந்திக்க வேண்டும்" இவ்வாறு முதல்வர் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT