
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமலில் உள்ள நிலையில், வரும் மே 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழு மற்றும் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாளை (22/05/2021) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
இதில், கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? முழு ஊரடங்கில் தளர்வுகளை அளிக்கலாமா? கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து முதல்வர் ஆலோசிக்க உள்ளார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (21/05/2021) நண்பகல் 12.00 மணிக்கு காணொளி காட்சி மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஆலோசனை நடத்துகிறார். இதில் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த ஆலோசனையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, சேலம், திருச்சி, மதுரை, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.