ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை படிவம் தட்டுப்பாடு!

11:54 PM Jan 19, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் 3-வது அலை பரவல் தீவிரம் அடைந்துள்ளது. தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். நோய் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சிகிச்சை பெறவும், பரிசோதனை செய்து கொள்ளவும் மக்கள் பலர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

பரிசோதனை செய்யும் போது மாதிரியை சேகரிப்பதோடு பரிசோதனை செய்து கொள்பவரின் பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களைப் பரிசோதனைக்கான படிவத்தில் பூர்த்தி செய்வது வழக்கம். இதற்குத் தேவையான படிவங்களை சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் சில அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த பரிசோதனை படிவம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசோதனை செய்து கொள்ள வரும் மக்களிடம், அங்கு கைவசம் இருக்கும் படிவத்தை கொடுத்து நகல் எடுத்து வருமாறு சுகாதாரத்துறையினர் அனுப்பி வைக்கின்றனர். பொதுமக்களும் நகல் எடுக்கும் கடைகளைத் தேடிச் சென்று நகல் எடுத்துக் கொடுத்து பரிசோதனை செய்து கொள்கின்றனர். தேனி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கடந்த சில நாட்களாகப் படிவங்கள் தட்டுப்பாடு நிலவியது.

நேற்று கரோனா பரிசோதனை செய்ய சென்ற மக்கள், படிவத்தை நகல் எடுக்க கடைகளுக்கு அனுப்பப் பட்டனர். ஆனால் தேனியில் நேற்று மின்தடை என்பதால் நகல் எடுக்க கடை, கடையாக அலைந்து திரியும் நிலைமைக்கு சிலர் தள்ளப்பட்டனர்.

இதுசம்பந்தமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது, 'கரோனா பரிசோதனை படிவம் தட்டுப்பாடு கடந்த ஐந்து நாட்களாக நிலவுகிறது. கைவசம் ஓரிரு படிவங்கள் தான் இருப்பதால் அதையே நகல் எடுத்து பயன்படுத்திக் கொள்கிறோம் என்றனர். படிவம் தட்டுப்பாடு காரணமாக அறிகுறிகளுடன் வருபவர்களையே நகல் எடுக்க அனுப்பி வைப்பதால் அவர்கள் மூலம் கடைக்காரர்கள் உள்பட மேலும் பலருக்கு கரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே தட்டுப்பாடின்றி போதிய அளவில் படிவங்களை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் மத்தியிலிருந்து வருகிறது''என்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT