ADVERTISEMENT

தொடரும் ரயில் கொள்ளை; பயணிகள் அச்சம்!

08:55 AM May 07, 2019 | elayaraja


சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சேலம் - ஈரோடு வழியாக செல்லும் ரயில்கள், மாவேலிபாளையம் அருகே செல்லும்போது, 20 கிமீ வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட தூரம் வரை ரயில்கள் மெதுவாகச் செல்வதை கண்காணித்து வந்த கொள்ளையர்கள், ரயில் பயணிகளிடம் நகைகள், கைப்பைகளை கொள்ளை அடித்துக்கொண்டு ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பி விடுகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


கடந்த மே 3ம் தேதி, ஓடும் ரயிலில் பயணிகளிடம் 22 பவுன் நகைகளைக் கொள்ளை அடித்த மர்ம கும்பல், மறுநாளும் (மே 4) அதேபோல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. அப்போது எட்டு பவுன் நகைகளைக் கொள்ளை அடித்த மர்ம நபர்கள், ரயிலில் பாதுகாப்புக்குச் சென்றிருந்த காவலர்களையும் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். தொடர்ச்சியாக இரண்டு நாள்களில் முப்பது பவுன் நகைகளை கொள்ளை அடித்ததாக காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரு சம்பவங்களிலும் ஒரே கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


வடமாநிலங்களில் மட்டுமே நடந்து வந்த இதுபோன்ற ரயில் கொள்ளை சம்பவங்கள், இப்போது தமிழக ரயில்களிலும் நடந்து வருகின்றன. இதனால் ரயில் பயணிகளிடையே அச்சம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கொள்ளை கும்பலை பிடிக்க பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சேலம், ஈரோடு ரயில்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நூறு அடிக்கு இரு காவலர்கள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கொள்ளையை அரங்கேற்றிவிட்டு தப்பியோடும் மாவேலிபாளையம் பகுதியில் மட்டும் 300க்கும் அதிகமான காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய பழைய வடமாநில கொள்ளையர்கள், தமிழகத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஆகியோரின் விரல் ரேகைகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


இந்நிலையில், ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் டிஐஜி பாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மே 5ம் தேதி, ரயிலில் கொள்ளை நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். அதன்பிறகு திங்கள்கிழமை (மே 6), அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை நடத்தினார். கொள்ளை கும்பலை விரைந்து பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் கூறுகையில், ''கொள்ளை கும்பலை பிடிக்க அனைத்து ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கொள்ளை கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கையில் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே காவல்துறை, உள்ளூர் காவல்துறை ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT