ADVERTISEMENT

ஈரோட்டில் தொடரும் உச்சம்...! - கட்டுக்கடங்காத கரோனா...!

07:57 PM Jan 19, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செய்தது. இதன் காரணமாக கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மூன்றாவது அலை தொடங்கிய சென்ற சில நாட்களாக மீண்டும் ஈரோட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா பரவல் மீண்டும் கூடுதல் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.

இந்தநிலையில் சென்ற 7-ந் தேதி தினசரி பாதிப்பு 100-ஐ கடந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல் படி கடந்த 18 ந் தேதி ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிதாக மேலும் 777 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் 237 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனா பாதிப்புடன் 75 வயது முதியவர் ஒருவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதனால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 716 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாவட்டம் முழுவதும் 3,366 பேர் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாநகரப் பகுதியிலும் தற்போது தினசரி பாதிப்பு அதிகமாகப் பரவி வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, கரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு இரவு நேர ஊரடங்கு, மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என பல கட்டுப்பாடுகளை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறோம். ஊரடங்கின் போது சாலைகள் வெறிச்சோடித் தான் காணப்படுகிறது. ஆனால் வைரஸ் பரவல் தான் கட்டுக்குள் வரவே இல்லை. ஈரோடு மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 4,500 முதல் 5,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலோனோருக்கு லேசான அறிகுறி உள்ளதால் அவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். வீட்டு தனிமையில் இருப்பவர்களை அந்தந்த பகுதிக்கு உட்பட்ட சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது ஈரோடு மாவட்டத்தில் இறப்பு விகிதம் குறைவுதான்.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனோர் 60 வயதை கடந்த முதியவர்கள்தான். எனவே 60 வயது தாண்டிய முதியவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முடிந்தவரை வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என கூறுகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT