ADVERTISEMENT

முன்னாள் ரிஷிவந்தியம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவராஜ் காலமானார்...

09:05 AM Sep 21, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் வசிப்பவர் சிவராஜ். இவர் பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர், காங்கிரஸ் கட்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டு கட்சியில் மாவட்ட தலைவராக செயல்பட்டவர். அதோடு காங்கிரஸ் கட்சி சார்பில் ரிஷிவந்தியம் தொகுதியில் 1984, 1996, 2001 & 2006 ஆகிய நான்கு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

2011 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தியை தனி ஹெலிகாப்டர் மூலம் திருக்கோவிலூருக்கு வரவழைத்து பிரச்சாரத்தில் ஈடுபட வைத்தவர். காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தலைவராக இருந்த மூப்பனாருடன் நெருக்கமாக இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் உறவினர்களும் காங்கிரஸ் கட்சியை அப்பகுதியில் வளர்த்தவர்கள். விழுப்புரம் மாவட்டத்தில் அசைக்க முடியாத அரசியல் கட்சி தலைவராக விளங்கிவந்த அவர் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு தினகரன் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அந்த கட்சியில் மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்துவந்தார். சமீபத்தில் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7.30 மணி அளவில் சிவராஜ் உயிரிழந்தார்.

இவர் தொழில் அதிபராகவும் விளங்கினார். அரசியல் கட்சி மூலம் மக்களோடும் நெருங்கிப் பழகினார். அவரது உயிரிழப்பு இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு அமுதா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான திருக்கோவிலூர் கொண்டுவரப்பட்டு இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு மூத்த அரசியல்வாதியான சிவராஜ் மறைந்தாலும் அவர் நினைவு மக்கள் மனதில் மறையாமல் நிலைத்திருக்கும் என்கிறார்கள் அவரது அபிமானிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT