Skip to main content

“ஆயிரம் ரூபாய் செலவு செய்வதற்கு பதிலாக இங்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” - ஹசன் மெளலானா

 

Come here and get vaccinated instead of spending a thousand rupees - Hassan Moulana

 

நாடு முழுவதும் கரோனாவின் பரவல் அதிதீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பல மாநிலங்களும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து சில தளர்வுகளுடனான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தினக்கூலிக்கு வேலை செய்வோர், சாலையோர மக்கள், ஆதரவற்ற மக்கள் என பலரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கடும் நேருக்கடியான சூழலை தமிழகம் சந்தித்துவந்தாலும் அரசின் முன்னேற்பாடுகள் பலரையும் கடும் பாதிப்புக்கு உள்ளாக்காமல் உதவியாக இருந்துவருகிறது. அதேபோல் கரோனாவில் இருந்து முழுமையாக நம்மை தற்காத்துக்கொள்ள அரசு மற்றும் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்திவருகின்றனர். 

 

அரசியலைச் சார்ந்தவர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கும் செய்துவருகின்றனர். அந்த வகையில் ராஜீவ் காந்தியின் நினைவு தினமாக இன்று (21.05.2021) வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா வேளச்சேரி, கம்பர் தெரு, நேரு நகரில் ஏழை, எளிய மக்களுக்கு உணவளித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது, “வருங்கால பாரதத்தை வித்திட்டவர் அமரர் ராஜீவ் காந்தி. அதனடிப்படையில் 2021 வேளச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள்  என்னை வெற்றிபெற செய்துள்ளனர். இன்று எங்களது தலைவர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை நடத்தியுள்ளோம். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி 1 லட்சம் முகக்கவசம், ஆம்புலன்ஸ் ஆகியவற்றை உடனே தொகுதி மக்களுக்காக தயார் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

 

Come here and get vaccinated instead of spending a thousand rupees - Hassan Moulana

 

ஏற்கனவே ஸ்டிக்கர் ஒட்டாமல் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருந்தோம். ஆனால் பின்னர் தலைவர் சொல்லியதற்கிணங்க ஸ்டிக்கர் ஒட்டிய ஆம்புலன்ஸ் தயார்செய்துகொண்டிருக்கிறோம். அதேபோல் மக்களுக்கு உதவிசெய்யும் பணியில் காங்கிரஸ் கட்சியினர் எப்பொழுதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் உயிர்நீத்த ராஜீவ் காந்தி அவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக இன்று காங்கிரஸ் மக்கள் பேரியக்கமாக மாறியுள்ளது. அதேபோல் காங்கிரஸ் தமிழகத்தில் பேரியக்கமாக ஆனதன் பின்பு கிடைத்த இந்த வெற்றியை தலைவர் ராஜீவ் காந்திக்கு சமர்ப்பிக்கிறோம். வேளச்சேரியைப் பொறுத்தவரையில் ப்ரமைரி ஹெல்த் சென்டர், கம்யூனிட்டி ஹெல்த் சென்டர் ஆகிய இரண்டின் மூலம் கரோனா முகாமை நாங்கள் நடத்திவருகிறோம். இந்தக் கரோனா முகாமின் மூலம் தினமும் 200 முதல் 300 பயணாளிகள் பயன்பெறுகிறார்கள். இதனை நாம் நேரடியாக அங்கு சென்று பார்த்தாலே தெரியும். தினமும் குறைந்த அளவான மக்களே வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கிறார்கள். 

 

அதனால் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மிகவும் முக்கியம். இன்னும் அதிக மக்கள் தடுப்பூசியை நம்பமால் உள்ளார்கள். எனவே தனியார் மருத்துவமனைக்குச் சென்று 1000 ரூபாய் செலவு செய்வதற்குப் பதிலாக, இதுபோன்ற உங்களது இடத்திற்கு அருகில் இருக்கும் தடுப்பூசி முகாமைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அரசு சார்ந்த இடங்களை நாங்கள் நன்கு பராமரித்து சுத்தமாக வைத்துள்ளோம். எனவே இங்கு வந்து கண்டிப்பாக அனைவரும் கரோனாவுக்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன். முதல் அலையின்போது நாங்கள், அனைவருக்கும் கபசுரக் குடிநீர் கொடுத்தோம். ஆனால் இந்தக் கரோனா இரண்டாம் அலையானது, காற்றில் கூட தீவிரமாக பரவிவருகிறது. அதனால் சித்தா மருந்துகள் இருந்தால்கூட தடுப்பூசி மருந்து செலுத்திக்கொள்வது மிக அவசியமாயிற்று. எனவே கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.