ADVERTISEMENT

“பிள்ளைகளுக்கு மூன்று வேளை சோறு கூட போட முடியாத நிலை நீடிக்கிறது” - அமைச்சர் துரைமுருகன் 

11:05 AM Mar 05, 2024 | ArunPrakash

தமிழக முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறையில் நேற்று(4.3.2024) தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர் தாலுகா மற்றும் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “ஒருவனுக்கு தங்க நிழல் கூட இல்லாமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் விண்ணில் ஊர்திகளை செலுத்துகிறோம், சந்திரனுக்கு அனுப்புகிறோம், சூரியனை நெருங்கிவிட்டோம் என்று பேசுவது மனிதாபிமானம் ஆகாது. அது அறிவுடைமைக்கு வேண்டுமானால் எடுத்துக்காட்டாக இருக்கலாம். அதனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் குடிசை மாற்று வாரியம் மூலம் விடுகளை வழங்கி வருகிறோம்.

ADVERTISEMENT

இன்றைக்கும் மக்களுக்கு இலவச சோறு போடுகிற நிலைமையில் தான் இருக்கிறோம். பிள்ளைகளுக்கு மூன்று வேளை சோறு கூட போட முடியாத சூழ்நிலையில் உள்ளது. பஞ்சத்தில் உள்ளார்கள். உடுத்த உடை கூட யாராவது கொடுக்க மாட்டார்களா என காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாற்றுவது தான் நமது அரசு. தேர்தல் முடிந்த உடன் 8 லட்சம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்படும். மக்களுக்கு தொண்டு செய்வது எங்கள் தலையாய கடமை என கலைஞர் செய்தார்; அதை அவரது மகன் முதல்வர் ஸ்டாலின் இப்போது செய்து வருகிறார்” என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த விடாமல் தமிழக அரசு தடுக்கிறது என்று பிரதமர் மோடி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறாரே என கேட்டதற்கு, “மதுரை எய்ம்ஸ் அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான், அவர்கள் தான் செயல்படுத்தவில்லை. எங்கள் மீது பழி சொல்வது நியாயம் இல்லை. நாங்கள் தடுத்திருக்கிறோம் என்று ஒரு திட்டத்தை சொல்ல சொல்லுங்கள். மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர், நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர் எந்த திட்டத்தை தடுத்தோமா? இல்லையா என்று சொல்ல வேண்டும். பா.ஜ.க எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படத்தை போட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்களே. பா.ஜ.கவினர் அதிமுக தலைவர்கள் படத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று அ.தி.மு.க.வினருக்கு தான் ரோசம், கோபம் வர வேண்டும். பிரதமர் பத்து முறை கூட வரலாம்; யார் வேண்டாம் என்று சொன்னார்கள்.

பிரதமர் தி.மு.க.வை தொடர்ந்து தாக்கி பேசி வருகிறாரே என கேட்டதற்கு, “இவ்வளவு நாள் தி.மு.க.வை பற்றி பேசினாரா பிரதமர். தேர்தல் வரும்போதுதான் தி.மு.க.வை பற்றி பேசுகிறார். ஜல்லிக்கட்டு காலத்தில் வண்டி மாடு ஒரு மாறி தலையை ஆட்டும். அதுபோல தான் பிரதமரின் பேச்சு. இதெல்லாம் ஒரு அரசியல் சீசன் சார்”.

போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களே என கேட்டதற்கு, “அரசியல் கட்சி இதெல்லாம் பண்ணாமலா இருப்பார்கள்; அது அரசியல்” என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT