DMK spokesperson Sivaji Krishnamurthy removed

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே சட்டப்பேரவையில் நிகழ்ந்த சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு தயாரித்து கொடுத்த உரையில் சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு ஆளுநர் பேசியதும், அதற்கு எதிராக தமிழக முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்த போது, ஆளுநர் அவையை விட்டு உடனடியாக வெளியேறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் ஆளுநர் குறித்து தங்களது கருத்துக்களைத்தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற திமுகவின் பேச்சாளர் தமிழக ஆளுநர் குறித்து அவதூறான வகையில் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில், ஆளுநரின் துணைச் செயலர் சென்னை மாநகரக் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்தப் புகார் தொடர்பாக காவல்துறை தரப்பில் சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கினை நீதிமன்றத்தின் மூலமாக தொடருமாறு தமிழக அரசுக்கு சென்னை மாநகரக் காவல்துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சை திமுக தலைமை ஆதரிக்கவில்லை. இது வருந்தத்தக்கது தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துபொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.