ADVERTISEMENT

இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு

07:14 AM Jan 06, 2024 | ArunPrakash

வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில், 284 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான 7 மாதகால பயிற்சி நிறைவு விழா கோட்டை கவாத்து மைதானத்தில் நேற்று(5.1.2024) நடைபெற்றது. இதில், பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையினை காவல் பயிற்சி பிரிவு டிஐஜி ஆனி விஜயா ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் வேலூர் சரக டிஐஜி முத்துசாமியும் கலந்துகொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்த காவலர்களுக்குப் பதக்கங்களையும் வழங்கினார்கள்.

ADVERTISEMENT

இதில், சட்டப் பிரிவு பயிற்சியில் அருணாஸ்ரீயும் கவாத்து பயிற்சியில் கனிமொழியும், துப்பாக்கிச் சுடுதலில் ஜனனியும் முதல் பரிசு வென்றனர். ஆல்ரவுண்டராக வெற்றி பெற்ற அருணா ஸ்ரீக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இதில் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி பேசுகையில், பிற்படுத்தப்பட்ட மிக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் வாழ்வில் மேன்மையுறும் வகையில் அனைத்து மக்களுக்காகவும் நீங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பயிற்சி முடித்த பெண் காவலர்களிடம் கூறினார்.

பின்னர் டிஐஜி ஆனி விஜயா பேசுகையில், வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்கள் நீங்கள் பயிற்சியை பெற்றுள்ளது மிகுந்த சிறப்பானது. தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்துள்ளனர். காவல்துறையில் எல்லா காவல்நிலையங்களிலும் தற்போது 50 சதவிகிதம் பெண் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெண் காவலர்கள், பெண்கள் குழந்தைகள் பிரச்சனைகளை நல்ல முறையில் கையாண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றனர். எப்போதும் பெண் காவலர்கள் சேவை மனப்பான்மையுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றார். இவ்விழாவில் பயிற்சி முடித்த பெண் காவலர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT