ADVERTISEMENT

“அப்பா, அம்மா கஷ்டப்படுறாங்க... மத்தவங்களையும் கஷ்டப்படுத்தக் கூடாது” - கடிதம் எழுதிய மாணவி தற்கொலை 

05:36 PM Jul 28, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்லை மாவட்டத்தின் களக்காடு பக்கமுள்ள சிதம்பரபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துக்குமார் (55) இவருக்கு மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது 18 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்துமுடித்துவிட்டு, நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்.சி.(ஐ.டி) படிப்பிற்காக விண்ணப்பித்தவருக்கு இடம் கிடைத்தது. செமஸ்டர் பணம் ரூ. 12 ஆயிரம் கட்டமுடியாமல் தவித்த தந்தை முத்துக்குமார் இரண்டு தவணையாகக் கட்டியிருக்கிறார். ஆனாலும் கூலித் தொழிலாளி வருமானத்தில் குடும்பத்தை நடத்த போதிய பணமில்லாமல் திண்டாடியிருக்கிறார். ஆனாலும் மகள் படிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் சிரமப்பட்டு பணம் கட்டியதாகத் தெரிகிறது.

இதையெல்லாம் அருகிலிருந்தபடியே கவனித்த அவரது மகள், பெற்றோர் படுகிற சிரமங்களை எண்ணி வேதனைப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் முத்துக்குமார் தன் மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அது சமயம் வீட்டில் தனியே இருந்த அவரது மகள் மன வேதனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.


வீடு திரும்பிய முத்துக்குமாரும் மனைவியும் வீடு உட்புறம் பூட்டியிருந்ததால் நீண்ட நேரமாக தட்டியுள்ளனர். பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மகள் தூக்கில் சடலமாகத் தொங்கியது கண்டு கதறியிருக்கிறார்கள். தகவலறிந்து சம்பவ இடம் வந்த களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் உடலைக் கைப்பற்றி உடற் கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவியின் கைப்பையைச் சோதனையிட்டதில் அதில் அவர் தற்கொலைக்கு முன்பாக எழுதிய கண்ணீர் கடிதம் சிக்கியிருக்கிறது.


கடிதத்தில், ‘எனக்குக் காலேஜ் பீஸ் கட்ட அப்பா, அம்மா கஷ்டப்படுறாங்க. மற்றவங்களையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று தான் இந்த முடிவு. என் சாவில் மர்மம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த லெட்டர். எனது தற்கொலைக்கு வேறு எதுவும் காரணமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளதாகப் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

மாணவியின் இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT