ADVERTISEMENT

எஸ்ஐ அடித்து கொன்ற விவசாயி குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரண நிதி... சேலம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! 

08:17 AM Jun 28, 2021 | sivarajbharathi



ADVERTISEMENT

சேலம் அருகே, காவல்துறை எஸ்எஸ்ஐ லட்டியால் அடித்துக் கொன்ற விவசாயி முருகேசனின் குடும்பத்தினருக்கு, முதல்வர் பொது நிவாரண நிதி 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சனிக்கிழமை (ஜூன் 26) நேரில் சென்று வழங்கினார்.

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடையப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. கடந்த 22ஆம் தேதி, பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்துகொண்டிருந்தார். ஏத்தாப்பூர் காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ பெரியசாமி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது எஸ்எஸ்ஐ பெரியசாமி மூங்கில் லட்டியால் சரமாரியாக தாக்கியதில் முருகேசன் கீழே விழுந்தார். இதில் அவருடைய பின்பக்க தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை தாக்கிய எஸ்எஸ்ஐ பெரியசாமி கைது செய்யப்பட்டதுடன், பணியிடைநீக்கமும் செய்யப்பட்டார்.

இந்நிலையில், முருகேசனின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் உத்தரவின்பேரில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சனிக்கிழமை (ஜூன் 26) காலை முருகேசனின் வீட்டிற்கு நேரில் சென்றார்.


அவருடைய மனைவி அன்னக்கிளி, மகள்கள் ஜெயபிரியா, ஜெயபிரதா, மகன் கவிப்பிரியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். அரசு விதிகளுக்கு உட்பட்டு தேவையான உதவிகள் செய்யப்படும் என குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து முதல்வர் அறிவித்தபடி, 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதிக்கான காசோலையை அன்னக்கிளியிடம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் வட்டாட்சியர் (பொறுப்பு) வரதராஜன் உடன் இருந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT