ADVERTISEMENT

முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த காசு; அரசு கொடுத்த பயிற்சியால் ஆவணமான நாணயம்

01:02 PM Mar 15, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆசிரியர் ஒருவர் 12 ஆண்டுகளாக வைத்திருந்த பழமையான செப்புக்காசு முதலாம் ராஜராஜசோழனால் வெளியிடப்பட்டது என்பதை அறிய தமிழ்நாடு அரசு கொடுத்த தொல்லியல் பயிற்சி உதவியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், மம்சாபுரத்தில் உள்ள சிவந்திப்பட்டி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி வரலாறு ஆசிரியர் செல்வத்திடம், இளந்திரை கொண்டான் என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு மாணவர் 12 ஆண்டுகளுக்கு முன் ஒரு பழமையான செப்புக்காசை கொடுத்துள்ளார். அக்காசு பற்றி எதுவும் தெரியாததால் செல்வம் அதை பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ஆசிரியர்களுக்கான தொல்லியல் பயிற்சியின் முதல் சுற்று மதுரையில் நடைபெற்றது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் நாணயங்களின் வரலாற்றுச் சிறப்புகள் பற்றி தஞ்சாவூர் ஆறுமுக சீதாராமன் வகுப்பெடுத்தார். இதன்பின் தன்னிடம் இருந்த இந்த காசு முதலாம் ராஜராஜசோழனால் வெளியிடப்பட்டது என்பதை அவர் அறிந்து கொண்டார்.

இதுபற்றி ஆசிரியர் செல்வம் கூறியதாவது, “12 ஆண்டுகளாக என்னிடமிருந்தும் அதன் முழுப்பெருமையும் தெரியவில்லை. மதுரையில் நடந்த தொல்லியல் பயிற்சியால் அக்காசின் சிறப்பை தெரிந்து கொண்டேன். தமிழ்நாடு அரசு வழங்கிய இந்தப் பயிற்சி எனக்குள் தொல்லியல் தேடலை விதைத்துள்ளது. இதை என் மாணவர்களுக்கும் கற்றுத்தருவேன். பயிற்சி வழங்கிய அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், ஆணையருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இக்காசு குறித்து பயிற்சியை ஒருங்கிணைத்த திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு கூறியதாவது, “வரலாற்றை அறிய நாணயங்கள் உதவுகின்றன. மன்னர்கள் தங்களின் போர் வெற்றியைக் கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டுள்ளார்கள். அவ்வாறு போர் மூலம் இலங்கையை முதலாம் ராஜராஜசோழன் வெற்றி கொண்டதன் பின்னணியில் தன் பெயர் பொறித்த ஈழக்காசுகளை வெளியிட்டுள்ளான். இவை முதலாம் ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன காசு ஈழக்கருங்காசு எனப்படுகிறது.

இக்காசுகளின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்களும், சங்கும் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் “ஸ்ரீராஜராஜ” என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT