1000 year old raja raja chola scriptures and Mahavira statue found near madurai

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம், ராஜராஜ சோழன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகில் காரைக்கேணி ஊராட்சிக்குட்பட்ட செங்கமேடு பகுதியில் கி.பி.9ஆம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிற்பமும், கி.பி.10ஆம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் ராஜராஜசோழன் வட்டெழுத்துக் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

1000 year old raja raja chola scriptures and Mahavira statue found near madurai

Advertisment

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்று துறை தலைவர் முனைவர் து.முனீஸ்வரன், வரலாற்றுத்துறை மாணவர் ம.மணி, தமிழ்த்துறை மாணவர் நீ.பழனிமுருகன், வழக்கறிஞர் மோ.நாகபாண்டியன் ஆகியோர் கொண்ட குழுவினர், தேவட்டி முனியாண்டி கோவில் அருகில் செங்கமேடு பகுதியில் பாழடைந்த நிலையில் இருந்த பழமையான சத்திரம், கிணறு ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, அவற்றின் சுவரில் உள்ள கற்களில் பழமையான தமிழ் மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கல்வெட்டாய்வாளர் ஒருவரின் உதவியுடன் படிக்கப்பட்டதில் இவை முதலாம் இராஜராஜசோழன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டுகள் எனத் தெரியவந்தது.

அங்கிருந்து 500மீ தூரத்தில் ஒரு மகாவீரர் சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டது.

1000 year old raja raja chola scriptures and Mahavira statue found near madurai

இது குறித்து முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது, சத்திரத்தின் சுவர்ப் பகுதியில் சிறு சிறு துண்டுகளாய் இருந்த தமிழ்க் கல்வெட்டுகளில் உள்ள சொற்களை கொண்டு, அவை கி.பி.13ஆம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்திக் கல்வெட்டு என அறியமுடிகிறது. வட்டெழுத்து கல்வெட்டு சத்திரம் மற்றும் கிணற்றில் 8 வட்டெழுத்து துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. இவை காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி என்ற விருது பெயருடன் தொடங்கும் முதலாம் இராஜராஜசோழனின் 13ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தவை. இதன் காலம் கி.பி.998 ஆகும். கிரந்த எழுத்து கலந்து எழுதப்பட்டுள்ள இதில், செங்குடி நாட்டில் உள்ள திருஉண்ணாட்டூர் என்ற ஊர் கோவிலில் விளக்கு எரிக்க கொடுத்த கொடை சொல்லப்பட்டுள்ளது. இக்கோவிலின் பெயர் "அர்ஹா" எனத் தொடங்குகிறது. அக்கல்வெட்டின் மீதிப்பகுதி சத்திரத்தில் உள்ள தூணின் அடிப்பகுதியில் மறைந்துள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள இதனை அருகன் எனக் கொண்டால் இதை சமணப்பள்ளியாகக் கருதலாம்.

இதன் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 24வது சமணத் தீர்த்தங்கரரான மகாவீரரின் கருங்கல் சிற்பமும் இதை உறுதியாக்குகிறது. மகாவீரர் சிற்பம் இச்சிற்பம் 3¼ அடி உயரமும், 2¼ அடி அகலமும் உள்ளது. இதன் பீடத்தில் மூன்று சிங்கங்கள் உள்ளன. அதன் மேல் இருபுறமும் நின்ற நிலையிலான இரு சிங்கங்கள் தாங்கியுள்ள சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். சிம்மாசனத்தில் உள்ள திண்டின் இருபுற முனைகளும் மகரத் தலைகளாக உள்ளன. மகாவீரரின் இருபுறமும் சாமரம் வீசும் இரு இயக்கர்கள் உள்ளனர். அவர் தலைக்கு மேல் முக்குடையும், பின்புறம் பிரபாவளி என்னும் ஒளிவட்டமும் உள்ளன. சிங்கம் மகாவீரரின் வாகனம் ஆகும். இதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டாககருதலாம். மகாவீரர் சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் மூலம், கி.பி.9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரையில் இங்கு ஒரு சமணப்பள்ளி வழிபாட்டில் இருந்து அழிந்ததை அறியமுடிகிறது.

1000 year old raja raja chola scriptures and Mahavira statue found near madurai

இவ்வூர் அருகிலுள்ள காரைக்கேணியில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளதும் கருதத்தக்கது. இப்பகுதியில் சிதறிக்கிடக்கும் செங்கற்கள் மூலம் இங்கு இருந்த சமணப்பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாக இருந்திருக்கும் எனக் கருதலாம். கல்வெட்டில் இப்பகுதி செங்குடி நாட்டில் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

இதில் செங்குடி என்பது விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் ஆகும். கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதிருஉண்ணாட்டூர் எனும் ஊர்தான் இப்பகுதியில் இருந்து அழிந்துபோன ஊராக இருக்கலாம். இங்கு இடைக்காலப் பானை ஓடுகள், செங்கற்கள் அதிகளவில் சிதறி கிடக்கின்றன. சேதமடைந்த நிலையில் இருந்த சமணப் பள்ளியின் கற்களைப் பெயர்த்தெடுத்து பிற்காலத்தில் அவற்றை சத்திரத்திலும் கிணற்றிலும் பயன்படுத்தியுள்ளனர்”இவ்வாறு அவர் தெரிவித்தார்.