ADVERTISEMENT

ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கோவை நபர்! 

03:36 PM Oct 04, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் நடைபெறுகிற குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக மாவட்ட எஸ்.பி. சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, தீவிர வாகன சோதனையும் நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மூலம் ரோந்து பணிக்காக கூடுதலாக போலீசார் இறக்கிவிடப்பட்டு, தொடர்ந்து 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். மாவட்டத்தில் திருடுபோன பொருட்களை மீட்கும் வகையில் எஸ்.பி. சசிமோகன், டி.எஸ்.பி. மேற்பார்வையில் குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெருந்துறை இன்ஸ்பெக்டர் தலைமையில் உள்ள தனிப்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரை ஓட்டிவந்தது கோயம்புத்தூர் மாவட்டம் ஆலாந்துறை, மங்களா பாளையம், வலையன்குட்டை பாபு தோட்டத்தைச் சேர்ந்த 55 வயது வினோத்குமார் என தெரியவந்தது. இவர் பெருந்துறை, காஞ்சிகோவில், மலையம்பாளையம், மற்றும் கோபி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவரிடமிருந்து 54 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. பிறகு வினோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து ஈரோடு எஸ்.பி. சசிமோகன் கூறும்போது, “மாவட்டத்தில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 275 திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 178 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் திருடப்பட்ட நகை மற்றும் வழிப்பறி செய்யப்பட்ட நகைகள் என 240 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 கால்நடைகளும் மீட்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூபாய் 1 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 418 ஆகும். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுபோன்று தொடர்ந்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT