
கோவை சுகுணாபுரத்தை அடுத்த செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த பீர்முகமது (37), நேற்று (27.07.2021) சென்னை மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து மெரினா கடற்கரையில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, சென்னை மாநகர போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மெரினா கடற்கரையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீசாரின் சோதனையில் அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பீர்முகமது தொடர்ச்சியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து மெரினா கடற்கரையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, அது விரைவில் வெடிக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவரது செல்ஃபோன் எண்ணைக் கொண்டு அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்த மாநில காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், அவரது விவரங்களைக் கோவை மாநகரப் போலீசாருக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து, பீர் முகமதை கோவை மாநகர போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். விசாரணையில், ஏற்கனவே பீர் முகமது கோவை அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானதும், கடந்த 2018ஆம் ஆண்டு குனியமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது. அதேபோல கடந்த ஆண்டு உக்கடம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக பீர் முகமது உக்கடம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது.
மேலும், குடிபோதையில் அவ்வப்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை பீர் முகமது வாடிக்கையாக வைத்திருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் கோவை வந்த சென்னை மெரினா கடற்கரை போலீசார், பீர் முகமதை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.