ADVERTISEMENT

‘இனிமே என்னப்பா செய்வீங்க?’ - மாநகராட்சியின் மாஸ்டர் ப்ளான்; குவியும் பாராட்டுகள்

06:08 PM Feb 08, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவையில் திரும்பிய திசையெல்லாம் காணப்படும் போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிப்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் கையாண்ட யுக்திகள், அரசியல்வாதிகளை மட்டுமின்றி பொதுமக்களையும் வாயைப் பிளக்க வைத்துள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில் போஸ்டர் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காந்திபுரம், 100 அடி சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், உள்ளூர் அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் எனப் போட்டிப் போட்டுக்கொண்டு திரும்பிய பக்கமெல்லாம் போஸ்டர்களை ஒட்டி விளம்பரம் செய்து வருகின்றன.

இதையடுத்து, பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதையும் மீறி பொது இடங்களிலும் மேம்பாலத் தூண்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் நகரின் தூய்மைக்கும் அழகுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் ஆதங்கப்பட்டு வந்தனர்.

இத்தகைய சூழலில் இதற்கு தீர்வு காணும் வகையில் மேம்பாலத் தூண்களில் ஓவியங்களை வரைவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொது இடங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட தமிழின் ஐம்பெருங்காப்பியங்களை வரைய வேண்டும் என கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

முதற்கட்டமாக கோவை காந்திபுரம் சாலையில் உள்ள மேம்பாலத் தூண்களில் இருந்த போஸ்டர்களை அகற்றிவிட்டு சிலப்பதிகாரக் காப்பியத்தில் வரும் காட்சிகள் தத்ரூபமாக வரையப்பட்டு வருகின்றன. சுமார் நூறு தூண்களில் வரையப்படும் இந்த ஓவியங்களால் கோவை நகரம் அழகு பெறுவது மட்டுமல்லாமல், இன்றைய தலைமுறையினர் நமது தமிழ் காப்பியங்களை ஓவிய வடிவில் அறியக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது கோவை மக்களிடையே அதிகம் பகிரப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT