ADVERTISEMENT

சிறுமியின் மரபணு சோதனையில் மேலும் ஒரு நபர்!- மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் காவல்துறைக்கு உத்தரவு!

11:19 PM Feb 24, 2020 | santhoshb@nakk…

ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கோவையைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவுக்கு, 4 வாரங்களில் பதிலளிக்க துடியலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார், கஸ்தூரி நாயக்கன் புதூரில் தங்கி இருந்து, அங்கு வசிக்கும் வயதான தனது பாட்டியை கவனித்து வந்தார். இந்நிலையில், 2019 மார்ச் 25-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து, உடலை வேறு இடத்தில் வீசி சென்று விட்டார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக விசாரணை நடத்திய துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், சந்தோஷ்குமாரை கைது செய்து, அவருக்கு எதிராக கொலை குற்றசாட்டின் கீழும், போக்சோ சட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம், சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை விதித்து 2019 டிசம்பர் 27 -ல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சந்தோஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

அந்த மனுவில், சிறுமியின் மரபணு சோதனையில், மேலும் ஒரு நபர் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறிய போதிலும், அது குறித்து மேல் விசாரணைக்கு உத்தரவிடாமல், அவசர அவசரமாக வழக்கை விசாரித்து தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்ட இந்தக் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் சுப்பையா மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க துடியலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT