ADVERTISEMENT

 லஞ்சம் கேட்ட அதிகாரிகள்; கூட்டுறவுத் துறை ஊழியர் போராட்டம்

05:50 PM Sep 01, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 61 வயது பூங்காவனம். இவர் திண்டிவனம் அடுத்துள்ள கொடூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் பூங்காவனம். தான் பணி செய்த காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட மற்றும் ஓய்வூதிய சம்பந்தமாக தனக்கு சேர வேண்டிய பணப் பலன்களை கொடுக்குமாறு கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அதற்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர் என்றும், பூங்காவனத்தினால் லஞ்ச தொகை கொடுக்க முடியாத காரணத்தினால் அதிகாரிகள் பூங்காவனத்தை அலைக்கழிக்க முடிவு செய்து அவருக்கு சேர வேண்டிய ஓய்வூதிய பணப்பலனுக்குரிய 11 லட்சத்து 31 ஆயிரத்து 924 ரூபாய்க்கான காசோலையை அவரிடம் கொடுத்து, ஆனால் அதனை வைத்து வங்கியில் செலுத்தி பணம் பெற முடியாமல் அதிகாரிகள் இடையூறு செய்துள்ளதாகவும் பூங்காவனம் கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து, தனக்கு சேர வேண்டிய பணப்பலன் கிடைக்காததற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு பூங்காவனம் கையில் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து அங்கு பறந்து வந்த போலீசார் போராட்டம் நடத்துவதற்கு முறைப்படி காவல் நிலையத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறி அவரை தாலுகா காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேற்படி தனக்கு சேர வேண்டிய பணப்பலன் கிடைக்கவில்லை அதற்காக போராட்டம் நடத்த வந்ததாக பூங்காவனம் கூறியுள்ளார்

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் அலுவலக அதிகாரிகள், பூங்காவனம் ஓய்வு பெற்ற பிறகு கிடைக்க வேண்டிய பணப்பலன் அவருக்கு ஏன் போய் சேரவில்லை என்பது குறித்து துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறினர். மேலும் பூங்காவனத்துக்கு சேர வேண்டிய நிலுவை தொகை 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பாக உள்ளதாகவும், அவருக்கு சம்மன் அனுப்பி இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT