சேலத்தில் சிறுமியை கடத்திச்சென்ற வாலிபர் மீது போக்ஸோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, பேரம் பேசிய போலீஸ் உதவி கமிஷனர் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment

bribe

சேலத்தை அடுத்த வீராணம் பகுதியைச் சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர், குமரகிரிபேட்டை பகுதியில் கட்டட வேலைக்குச் சென்று வந்தார். அப்போது குமரகிரிபேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். அந்த வாலிபர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகவும் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் அந்த வாலிபரும், சிறுமியும் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். பதறிப்போன சிறுமியின் பெற்றோர், மகள் கடத்தப்பட்டதாக அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

Advertisment

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீராணம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த இருவரையும் மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அம்மாபேட்டை போலீசார் அந்த வாலிபர் மீது சிறுமியை கடத்தியதாக போக்ஸோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் முயற்சிகளில் இறங்கினர்.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், கடும் தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்த வாலிபரின் தரப்பைச் சேர்ந்த சிலர், போக்ஸோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்குமாறு மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ஒருவரை அணுகி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருதரப்பையும் அழைத்துப்பேசிய அந்த உதவி கமிஷனர், சிறுமியின் பெற்றோரை சமாதானமாக செல்லும்படி கூறியுள்ளார். இதற்கு சிறுமியின் பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும், இருதரப்பும் சமாதானமாகப் போய்விட்டதாக அந்த உதவிகமிஷனர், அம்மாபேட்டை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளார். இதையடுத்து அம்மாபேட்டை போலீசார் சிறுமி கடத்தப்பட்டது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இதில் பேரம் பேசிய உதவி போலீஸ் கமிஷனர், குற்றம்சாட்டப்பட்ட வாலிபர் தரப்பினரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் கையூட்டு பெற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment

மகளின் வாழ்வை பறிகொடுத்துவிட்டு நிற்கும் சிறுமியின் பெற்றோர், மேற்கொண்டு செய்வதறியாது தடுமாறி நிற்கின்றனர். மகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்ற வாலிபர் மீதும், கையூட்டு பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் தடுத்த உதவி போலீஸ் கமிஷனர் மீதும் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் தரப்பினர் கூறினர்.