ADVERTISEMENT

நதி நீர் இணைப்பு.. கலைஞரின் கனவுத்திட்டம்; ஓசையின்றி நடத்திக் காட்டிய முதல்வர் ஸ்டாலின்

12:47 PM Feb 20, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கங்கையும் காவேரியும் இணைக்கப்படவேண்டும். வடக்கே பாய்கிற நர்மதையை அதன் மூலம் தென்னிந்தியாவுக்குக் கொண்டு வரப்படவேண்டும் என நதிகளின் இணைப்பு பற்றியவைகள் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களின் காலம் காலமான பேச்சானது. வடபுல நதியும், தென்பக்க நதிகளையும் இணைப்பது அத்தனை சாத்தியமா என்ற வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறதேயொழிய, அதற்கான நூலிழையான முயற்சிகள் இது வரையிலும் கண்ணுக்கு எட்டவில்லை. நதி நீர் இணைப்பு சாத்தியம் என்பதைக் கலைஞரின் கனவுத் திட்டமான அவரால் கொண்டு வரப்பட்ட இணைப்புத்திட்டத்தை இந்தியாவில் முதன் முறையாக பதவியேற்ற மறு கணமே நடத்திக் காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தேசத்தில் இது வரையிலும் எங்குமே நடத்தப்படாத நதி நீர் இணைப்பு. தாமிரபரணி நம்பியாறு, கருமேனியாறு பச்சையாறு ஆகிய நதிகளை ஒன்றிணைக்கும் நதிநீர் இணைப்புத் திட்டம் தென் மாவட்டத்திற்காக கலைஞரால் கொண்டுவரப்பட்டு முதல்வரின் தீவிரமுயற்சியால் இணைப்பு பணிகள் முடிகிற தருணத்திலிருக்கின்றன என்கிறார்கள் இப்பணியிலிருக்கும் டிவிசன்களின் பொறியாளர்கள். அப்படி சொல்லி விட்டு அத்தனை எளிதில் கடந்து சென்று விட முடியாது. இதற்காக பல ஆண்டுகள் போராடிய வேளாண்மக்கள், மக்கள் பிரதிநிதி ஆகியோரின் வற்றிய குரல்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவைகள் என்கிறார்கள் ராதாபுரம் பகுதி விவசாயிகள்.

தெற்கே தென்மேற்குத் தொடர்ச்சி மலையான நெல்லை மாவட்டத்தின் பாபனாசம் பகுதியின் சுமார் 6800 அடி உயரத்திற்கும் மேலான அடர்வனப்பகுதியிலிருக்கும் அகஸ்தியர் மலையின் நீர்ப் பிடிப்பான மிகப் பெரிய பரப்பளவைக் கொண்ட சதுப்பு நிலக்காடுகளிலிருந்து வெள்ளமாய் கொப்பளிக்கும் நீர், மலையிலுள்ள மிகப் பெரிய அணையான மணிமுத்தாறு, சேர்வலாறு மற்றும் பாபனாசம் என்று மூன்று அணைகளையும் நிரப்பி விட்டு பாபனாசம் பகுதியில் தரையிறங்குவது தான் வற்றாத தாமிரபரணியாறு. பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே இயற்கையாக பிறப்பெடுத்த தாமிரபரணி நெல்லை, தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளை வளமாக்கி விட்டு புன்னக்காயல் சென்று கடலில் சங்கமிக்கிறது.

மட்டுமல்ல, தாமிரபரணியோடு, ராமநதி, கடனாநதி, கொடுமுடியாறு, பச்சையாறு கருமேனியாறு, நம்பியாறு என ஏழு நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியானாலும், இவைகள் ஆறு கூறாகச் சமவெளியில் பாய்கின்றன. நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியான இவைகளால் மாவட்டத்தின் பிறபகுதிகள் இதனால் வளமானாலும், மாவட்டத்தை ஒட்டியுள்ள நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளை இந் நதிகள் எட்டவில்லை மழையை மட்டுமே நம்பியிருக்கிற வறட்சியான மானாவரிப் பகுதியானது.

அக்டோபர் நவம்பர் காலங்களின் வடகிழக்கு அடைமழை பருவமழையின் காலங்கள், அடுத்து தென் மாவட்டத்தின் வரப்பிரசாதமான, தேசத்தில் எங்குமே கிடைக்காத இயற்கையின் கொடையான தென்மேற்குப் பருவக்காற்றின் விளைவாய் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொட்டுகிற கோடை மழைக் காலங்களிலும் தாமிரபரணி உள்ளிட்ட ஏழு நதிகளிலும் வெள்ளம் பிரவாகமெடுக்கும். ஆது சமயம் வெள்ளமாய் பாய்கிற இந்த நதிகளின் உபரி நீர் அனைத்தும், முக்கூடலில் சங்கமித்து கரைபுரண்டு கோரிக்கையின்றி வீணாகப் புன்னக்காயல் கடலில் கடந்திருக்கிறது. இது போன்று யாருக்கும் உபயோகப்படாமல் வருடம் தோறும் சராசரியாக 31 டி.எம்.சி. அளவிலான நதி நீர் கலக்கிறது. அதனைத் தேக்கினால் பிறபகுதிக்குத் திருப்பினாலும் ஆறு மாதம் பயன்படும் என்கிறார்கள் அணைகளின் நீர்பாசனப் பொறியாளர்கள்.

இப்படி கடலில் கலக்கிற இத்தனை டி.எம்.சி உபரி வெள்ள நீரைக் கண்டு கொதித்துப் போன ராதாபுரம், நாங்குநேரி தொகுதிகளின் விவசாயிகள், மாதம் தோறும் நடக்கிற மாவட்ட ஆட்சியரின் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வீணாகப் போகும் அத்தனை டி.எம்.சி. தண்ணீரையும் எங்களின் தொகுதிப் பக்கம் திருப்பினால் விவசாயம் செழிக்கும். குடி நீர்ப்பஞ்சம் தீரும். வளமாகும் என்று வயிறெரிய மாநில விவசாய சங்கத் துணைத் தலைவர் பெரும்படையாரும் விவசாயிகளும் தொடர் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஆட்சியர்களோ இதனை அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள். விவசாயிகளின் இந்த வேதனையை அப்போதைய நேரங்களில் நக்கீரன் வெளிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் வருடம் தோறும் ஒப்பந்தப்படி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு வழங்கவிருக்கிற 31 டி.எம்.சி. அளவு தண்ணீர் இங்கே வீணாகக் கடலில் கலக்கிறது. ஆனால் எங்கள் பகுதியின் லட்சக்கணக்கான மக்கள் குடி தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான விவசாயிகள் தண்ணீரின்றி விளை நிலங்கள் தரிசலானது கண்டு கண்கலங்கி வாடுகிறார்கள். கடலுக்குப் போகும் நீரை வெள்ள நீர் கல்வாய் மூலம் எங்கள் ராதாபுரம் ஏரியாவுக்குத் திருப்புங்கள் விளை நிலம் செழிப்பாகும் குடி தண்ணீப் பஞ்சம் தீரும். வழியோரக் கிராமங்களும் பயனடையும். இயற்கை மக்களுக்காக கொடுத்த நீர்க் கொடையை அலட்சியப்படுத்தாதீர்கள். அது பஞ்சமாபாதகம் என்று மக்களைத்திரட்டி பல போராட்டங்களை நடத்திய அப்பாவுவின் போராட்டங்கள் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு எட்டவேயில்லை. பஞ்சத்திலடிபட்டுக் கொண்டிருக்கிற மக்களின் நிலையைத் தெளிவாக உணர்ந்த முதல்வர் ஜெ.வும் வழக்கமான போராட்டம் தானே என அலட்சியப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் அப்பாவு மக்களின் போராட்டத்தைத் தொய்வின்றிக் கொண்டு சென்றவர் நீர் மேலாண்மைத்துறையின் உயரதிகாரிகள் பலரிடம் வெள்ள நீர்க்கால்வாய்த்திட்டம் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். அப்போதைய ஆட்சியாளர்ளோ மனமிறங்கவில்லை. ஆட்சி மாறி கலைஞர் ஆட்சிக்கு வந்த போது ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ.வான அப்பாவு வெள்ள நீர் விஷயத்தைக் முதல்வர் கலைஞரின் கவனத்திற்குக் கொண்டு சென்றவர்.

மழைக் காலங்களில் உபரியாக கடலில்கலக்கிற தாமிரபரணி, நம்பியாறு பச்சையாறு கருமேனியாறுகளின் தண்ணீரை வெள்ள நீர்க்கால்வாய் மூலம் இணைத்து நாங்குநேரி வழியாக ராதாபுரம் கொண்டு வந்து அங்குள்ள மணல்பாங்கான எம்எல்தேரி சதுப்புக் காடுகளில் இணைத்து தேக்கினால், நீர் பிடிப்பாகி சுற்றுப்பட்டு கிராமங்களின் நீர் ஆதாரம் ஏறும். குடி தண்ணீர் பஞ்சம் தீருவதுடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் ராதாபுரத்தின் தரிசுக் காடுகள் விளை நிலமாகும். தவிர வழியோரக் கிராமங்களும் பலனடையும் என்ற பன்முகத்தன்மையான பலன்களை விரிவாக விவரித்திருக்கிறார் அப்பாவு.

நதி நீது இணைப்பின் பலன்களைத் தெரிந்து கொண்ட அப்போதைய முதல்வர் கலைஞரும் சற்றும் தாதிக்காமல் நீர் மேலாண்மைத்துறையின் பொறியாளர்களைத் திட்டம் பற்றி விரிவாக ஆய்வு செய்யப் பணித்திருக்கிறார். அவர்களின் ஆய்வறிக்கையின்படி 2010ன் போது தாமிரபரணி, கருமேனியாறு நம்பியாறு நதி நீர் இணைப்பின் வெள்ள நீர் கால்வாய் திட்டம் எனப் பெயரிட்ட முதல்வர் கலைஞர் அடுத்த நொடி அதற்காக அப்போது 369 கோடி நிதியையும் ஒதுக்கியிருக்கிறார். அதையடுத்தே தாமிரபரணி வெள்ள நீர்க் கால்வாய் திட்டம் 4 டிவிசன்களாகப் பிரிக்கப்பட்டு பணிகள் வேகமெடுத்திருக்கின்றன. பரணி பாயும் அம்பை நகரின் கல்லிடைக்குறிச்சி பக்கமுள்ள வெள்ளாங்குழியிலிருந்து தொலைவிலிருக்கும் ராதாபுரம் எம்எல்தேரிப் பாயிண்ட் வரை கால்வாய் தோண்டும் பணி வேகமெடுத்திருக்கிறது.

இரண்டு கட்டப் பணிகள் முடிவுற்ற நிலையில், ஆட்சி மாறி பொறுப்பிற்கு வந்த ‘ஜெ’ மக்களின் நலனுக்கானது என்று பார்க்காமல், இணைப்புத் திட்டம் கலைஞரால் கொண்டு வரப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக திட்டத்தைப் பரணேற்றி விட்டார். பாதிக்கிணறு தாண்டிய நிலையில் திட்டம் 2011 முதல் ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டது கண்டு நொந்து போன அப்பாவு தொகுதியின் மக்கள் திரண்டு வந்து முடக்கப்பட்ட பணியைத் தொடரும்படி வலியுறுத்திப் போராட்டத்தைத் தீவிரமாக்கியும் காரியமாகவில்லை. ‘ஜெ’ மறைவிற்குப் பின் ஆட்சியேறிய எடப்பாடி பழனிசாமியும் ‘ஜெ’வின் வழிலேயே நடைபோட்டிருக்கிறார். ஏறத்தாள அ.தி.மு.க.வின் ஆட்சி முடிகிற பவருடங்களாக நதி நீர் இணைப்புத்திட்டம் கவனிப்பாரின்றியே வைக்கப்பட்டிருக்கிறது. காலச் சூழலில் திட்டத்திற்கான எஸ்டிமேட்டும் எகிறியிருக்கிறது.

2021ன் போது எடப்பாடி அரசு கடந்து போய் தி.மு.க. ஆட்சி அமைந்தது. ராதாபுரம் எம்.எல்.ஏ.வான அப்பாவு சட்டமன்ற பேரவையின் தலைவரானார். அது சமயம் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, நதி நீர் இணைப்பு வெள்ள நீர்க் கால்வாய் பணிகள் கலைஞரால் தொடங்கப்பட்டு பின் முடக்கப்பட்டதை விவரித்தவர் அதனால் அம்பை, பாளை, நாங்குநேரி, திருச்செந்தூர், ராதாபுரம் போன்ற 5 தொகுதிகள் பலனடைவதையும் விபரங்களோடு கூறியிருக்கிறார். அதனையடுத்தே தாமதிக்காத முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை விரைவாக முடிக்கிற வகையில், ஒசையின்றி 933.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை வேகப்படுத்தியிருக்கிறார்.

இரண்டு வருடமாக நடைபெற்று வரும் நதி நீர் இணைப்பு பகுதிகளை ஆய்வு செய்த நீர் வளத்துறை அமைச்சரான துரைமுருகனும் பணிகளை விரைவு படுத்தியிருக்கிறார். அம்பை பகுதியின் பரணிபாயும் கல்லிடைக்குறிச்சியின் வெள்ளாங்குழியிலிருந்து நதிகளின் நீர் இணைப்பு பணியான வெள்ள நீர் கால்வாய் தோண்டுவது பாளை, திடீயூர் வழியாக நாங்குநேரியின் மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிபட்டி, ராதாபுரத்தின் நடுவக்குறிச்சி திருச்செந்தூரின் தட்டார்மடம் என 80 கி.மீ தொலைவு கால்வாய் அமைக்கப்பட்டு ராதாபுரம் பகுதியை ஒட்டிய எம்எல்தேரி சதுப்பு மணல் பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கிறது. பணிகள் முடிகிற தருவாயில் உள்ளன. ஆழமான மணல் திட்டுக்களைக் கொண்ட எம்எல்தேரியில் கால்வாயின் மூலம் வெள்ள நீர் சென்றடைவதால் அந்த சதுப்புக்காடுகள் அத்தனை வெள்ளத்தையும் உள்வாங்கிக் கொள்ளும். இதனால் சுற்றுப்பக்கமுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் உயரும் விவசாயம் பலனாகும், குடி நீர் பஞ்சம் தீரும். வெள்ள நீர்க் கால்வாயின் மூலம் பல குளங்கள் நிரம்புவதுடன் சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனமடையும் என்கிறார் இந்த டிவிசன்களின் சீனியர் இன்ஜினியர்.

நதி நீர் இணைப்பு பணிகள் நடந்த பல பகுதிகளிலும் பயணித்த நாம், இறுதியாக ஜாயிண்ட் பகுதியான எம்எல்தேரி வந்த போது அப்பகுதி செக்கச் செவேலென்று மிகப்பிரமாண்டமாயிருந்தது வியக்க வைத்தது. அது சமயம் நம்மைச் சூழந்து கொண்ட பூச்சிகாடு ஜெயராமன், மருதாச்சிவிளை லிங்கராஜ், எருமகுளம் லிங்கபாண்டி, முருகானந்தம் உள்ளிட்ட விவசாயிகள். தண்ணியில்லாமல் காய்ஞ்சி போன எங்க பூமிகள வித்துவிட்டு பொழைப்புத் தேடி வெளியேறுவோமாங்கிற முடிவுக்குக் வந்திட்டோம். குடிக்கிற தண்ணிக்கி பல நூறு அடி போர் போட்டத்தான் உப்பு கலந்த சவர் தண்ணிர் கிடைக்கும். எல்லா மக்களுக்கும் இதே கஷ்டம் தான். சில சமயம் போர்த் தண்ணி கெடைக்காம வற்றியும். போயிறும். கரண்ட் செலவு எக்குத் தப்பாயிறும். தண்ணியில்லாத வாழ்க்கையே எங்களுக்குப் பாரமாயிறுச்சி. எத்தன வருஷம் இந்த துன்பத்த அனுபவிக்கிறது. ஆட்சி மாறி ஸ்டாலின் முதல்வரானதும், சபாநாயகர் அப்பாவு முயற்சியால கிடப்புல கெடந்த நதிக இணைப்பு எம்எல்தேரி திட்டம் முடியப் போறது எங்களுக்கெல்லாம். வாழ்க்கையில நம்பிக்கையை உண்டாக்கியிருக்கு. ஏம்னா எம்.எல்.ஏ. அப்பாவு அய்யாவும் எங்களோட குடிதண்ணிக்குக் கஷ்டப்பட்டவுக தாம். இந்த தேரிக்காடு தண்ணிய உள்வாங்றதால பட்டுப் போன எங்க விவசாயம் தழுக்கும் கிராமங்க வளமாகும். வியாபாரம் செழிக்கும் என்றனர் புருவங்கள் உயர தெம்பான குரலில்.

பேரவைத் தலைவரான அப்பாவுவை நாம் சந்தித்தபோது அவர் கூறுகையில், மேற்குத் தோடர்ச்சி மலைல உற்பத்தியாகிற ஆறுகளால எங்க பகுதிக்குப் பிரயோஜனமில்ல வானம் பார்த்த ராதாபுரம் பூமியில செங்கல், ஒடுக தயாரிப்பு தான் மக்களோடு வாழ்வாதாரம். விவசாயமில்ல. சொல்லும்படியான தொழிலுமில்ல நீர் பிடிப்பான எம்எல்தேரி பகுதி பல நூறு அடிகள் ஆழத்துக்கு மணலால் ஆனது. அந்தப் பதியில உள்ள தண்ணிய ஆழமா போர் போட்டு குடிப்பதற்கு எடுத்ததால் நல்ல தண்ணீர் போயி, கடல் நீர் உள் வாங்கிறுச்சி. மக்கள் அதப் பயன்படுத்த வேண்டிய கட்டாயமாப் போச்சு. மழையத் தவிர வேற எங்களுக்கு ஆதாரமில்ல.

அதுக்காகத்தான் வெள்ளமாய் வீணா கடல்ல கலக்கிற நதிகளோட நீரை, வெள்ள நீர்க்கால்வாய் மூலம் இணைச்சி எங்க பகுதிக்குக் கொண்டுவரப் போராடுனோம். பிரயோஜனமில்ல. தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்தப்ப, சந்திச்சி நிலைமைகளைச் சொன்னேம். நதி நீர் இணைப்பு, வெள்ள நீர் கால் வாய் மூலம் கடலுக்குப் போற தண்ணிய எங்க பகுதி சதுப்புக்காடு எம்எல்தேரியில கொண்டு வந்து தேக்கினா நிலத்தடி நீர் 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உயரும் குடி நீர் பஞ்சம் தீரும். சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும். இந்த இணைப்பு மூலம் 5 தொகுதி பயனடையும்னு சொன்னேம். தலைவரும் ஆய்வுக்குப் பின்ன நிதி ஒதுக்குனாங்க. 2 கட்டப் பணி நடந்த நிலை ஆட்சி மாற்றமாயிறுச்சி. எடப்பாடி அரசும் கவனிக்கல. திட்டம் தடையானது. பின்பு ஆட்சி மாற்றமானது. முதல்வர் ஸ்டாலினிடம் பாதியில நின்று போன திட்டம் பற்றி விரிவாகக் கூறினேன். விரைந்து நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின் 933. கோடி ஒதுக்கினார். தற்போது பணிகள் முடிவு பெறும் நிலையிலிருக்கு. விரைவில் தாமிரபரணி எங்கள் பகுதியை எட்டிப் பார்க்கும் என்ற அவரின் குரலில் நிம்மதியும் திருப்தியும் வெளிப்பட்டது.

நதி நீர் இணைப்பு. கலைஞரின் கனவுத் திட்டம். சாத்தியமாகுமா என்பதை ஒசையின்றி சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT