ADVERTISEMENT

“காவிரியை விட இந்தியாவைத்தான் காப்பாற்ற வேண்டும்” - முதல்வர் ஸ்டாலின்

11:21 AM Jul 17, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்ற நிலையில் அடுத்த கூட்டம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

பெங்களூரு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “மத்தியில் மோடி தலைமையில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக் கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே பாட்னாவில் கூட்டத்தைக் கூட்டி சில முடிவுகளை எடுத்தோம். அதையடுத்து இன்றும் நாளையும் எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. அதில் நானும் உள்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். தொடர்ந்த எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனைக் கூட்டம் பாஜகவிற்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இன்று அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. வடமாநிலத்தில் தொடர்ந்து அமலாக்கத்துறையை ஏவிவிட்ட பாஜகவினர், தற்போது தமிழகத்திலும் அந்த பணியைத் தொடங்கியுள்ளனர். ஆனால் அதைப்பற்றி எல்லாம் திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

ஜெயலலிதாவின் ஆட்சியில் புனையப்பட்ட வழக்கில்தான் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக முன்பு போடப்பட்ட இந்த வழக்கை, தொடர்ந்து 10 ஆண்டுக்காலம் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் கூட எந்த நடவடிக்கையும் இல்லை. அண்மையில் கடந்த கால அட்சியில் போடப்பட்ட இரண்டு வழக்குகளிலிருந்து விடுதலையான பொன்முடி இந்த வழக்கையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வார். வரும் தேர்தலில் மக்கள் இதற்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசைதிருப்பவே பாஜக இதனைச் செய்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஏற்கனவே ஆளுநர் எங்களுக்காகத் தேர்தல் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அவருடன் தற்போது அமலாக்கத்துறையும் சேர்ந்திருக்கிறது. அதனால் எங்களுக்குத் தேர்தல் வேலை மிகவும் எளிமையாகிவிட்டது என்று நான் கருதுகிறேன்” என்றார்.

எதிர்க்கட்சி கூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து பேசுவிங்களா என்று செய்தியாளரின் கேள்விக்கு, “காவிரி மேகதாது பிரச்சனையைப் பொறுத்தவரையில், என்றைக்குக் கலைஞர் ஒரு முடிவு எடுத்து அந்த பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தாரோ அந்த பணியிலிருந்து கிஞ்சித்தும் நழுவாமல் தொடர்ந்து அந்த பணியை கடைப்பிடிப்போம். இந்த கூட்டம் மத்தியில் இருக்கும் பாஜகவை அகற்றுவதற்கான கூட்டம்; காவிரி பிரச்சனைக்கான கூட்டம் அல்ல. இந்தியாவிற்கே ஆபத்து வந்திருக்கிறது; அதனை காப்பாற்றத்தான் இந்த கூட்டம்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT