Skip to main content

“கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு மத்திய அரசு சாதகமாக இருக்கக் கூடாது” - ஜோதிமணி எம்.பி.

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Jothimani condemned the Karnataka Congress over the Cauvery issue

 

காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ எனத் தெரிவித்த எம்.பி. ஜோதிமணி, “கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வர் மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்; நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. காவிரி பிரச்சனையில் கர்நாடகா அரசு தமிழக மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது. மத்திய அரசு, கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக இருக்கக் கூடாது. காவிரி தண்ணீர் திறப்பதில் பாஜக அரசியல் செய்கிறது. தமிழகத்திற்கு 12 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் தேவை என கேட்டால், 5000 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என ஆணையம் கூறுகிறது. தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறப்பதில் சலுகை தேவையில்லை. எங்களது உரிமை தேவை.   

 

மத்திய அரசு 23 கோடி பேரை வறுமையில் தள்ளி உள்ளது. ஒன்பது வாரங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை. நாடு முழுவதும் 131 கோடி பேர் 100 நாள் வேலை திட்டத்தில் உள்ளனர். இதில் 91 லட்சம் பேர் செயல்படும் பணியாளர்களாக உள்ளனர். கரூர் மக்களவைத் தொகுதியில் 60 ஆயிரம் பேர் 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளனர். இவர்களில் 25 ஆயிரம் பேரை நான் நேரடியாக சந்தித்துள்ளேன். ஊதியம் இல்லாமல் இவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். இதுவரை அதற்குப் பதில் வரவில்லை.   

 

100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் உள்ளிட்ட  பணிகளுக்கு ரூ. 2.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு வெறும் ரூ. 60 ஆயிரம் கோடி மட்டும் நிதி ஒதுக்கப்பட்டது. இது 2020 - 22 நிதியாண்டை ஒப்பிடும் போது 18% குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்கிற குற்றச்சாட்டு உள்ளது. தற்போது, தமிழகத்தில் இருக்கும் நிர்மலா சீதாராமன் இதற்கு பதில் அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.  மேலும், டெல்லியில் தனியார் (நியூ கிளிக்) செய்தி நிறுவனத்தில் சென்று அவர்கள் பயன்படுத்திய மடிக்கணினி உள்ளிட்ட செல்போன்களை எடுத்துக்கொண்ட சம்பவம் கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்